“அமைதிப் பேச்சுவார்த்தை பலஸ்தீனத்துடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மட்டுமல்லாது ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் அயல் நாடான சிரியாவில் தொடரும் யுத்தம் ஆகியவற்றை எதிர்கெள்வதிலும் முக்கியமானதாகும்” என இஸ்ரேல் தலைவர் சனிக்கிழமை சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்த பேச்சுவார்த்தை மூலம் பல முக்கிய இலக்குகளை எட்ட முடியும் என்றும் நெதன்யாகும் குறிப்பிட்டார். இதன் மூலம் ஜோர்தான் ஆற்றுக்கும் கடலுக்கும் இடையில் தேசிய அரசொன்று உருவாவதை தடுக்க முடியும்.
இது எதிர்கால யூத தேசத்திற்கு அபாயகரமாக இருக்காது. அதேபோன்று ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத தேசம் ஒன்று இஸ்ரேல் எல்லைக்குள் உருவாவதை இது தடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் - பலஸ்தீனத்திற்கு இடையி லான நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து அது குறித்து இஸ்ரேல் பிரதமரின் முதல் கருத்து இதுவாகும். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் பகுதிகளில் சட்டவிரோதமாக குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து இஸ்ரேல் - பலஸ்தீன அமைதி பேச்சு வார்த்தை கடந்த 2010 ஆம் ஆண்டில் முறிவடைந்தது.
கைதிகள் விடுதலை
அமைதிப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதையொட்டி இஸ்ரேல், ஒரு சில பலஸ்தீன கைதிகளை விடுவிக்க தீர்மானித்துள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை, சர்வதேச உறவு மற்றும் மூலோபாய விவகாரங்களுக்கான அமைச்சர் யுவல் ஸ்டைனிட்ஸ் குறிப்பிட்டுள்ளார். எனினும் விடுவிக்கப்படவுள்ள பலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கை குறித்து எந்த விபரத்தையும் அவர் கூறவில்லை.
மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த் தையை மீள ஆரம்பிக்க கடும் முயற்சி மேற்கொண்டு வரும் ஜோன் கெர்ரி கடந்த வெள்ளிக்கிழமை பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் இருதரப்பு நேரடி பேச்சுவார்த்தை மீள ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
எனினும் பேச்சுவார்த்தை மீள ஆரம்பிப்பதற்கு குடியேற்ற நடவடிக்கை களை நிறுத்துவதற்கான எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்பட வில்லை என்று ஸ்டைனிட்ஸ் குறிப்பிட்டார். “நாம் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப எமது நாட்டு எல்லை குறித்த வரை விலக்கணமோ அல்லது குடியேற்றங்களை முடக்கும் நிபந்தனையோ இருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று அவர் வலியுறுத்தினார்.
ஹமாஸ் எச்சரிக்கை
எனினும் இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது மிக அபாயகரமானது என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை பலஸ்தீனர்கள் ஏற்ற உடன்பாட்டுக்கு முரணானது என காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் சமி அபு சுஹ்ரி கூறியுள்ளார். “பேச்சுவார்த் தையை ஆரம்பிப்பது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கும் அதனது குடியேற்ற நடவடிக்கையை விரிவுபடுத்தவும் மாத்திரமே உதவும்” என சுஹ்ரி கூறினார்.
எனினும் இந்த பேச்சு தோல்வியில் முடியும் என பலஸ்தீன பூர்வாங்க கட்சியின் தலைவர் முஸ்தபா பர்டதி எதிர்வுகூரியுள்ளார். “தற்போதைய இஸ்ரேல் அரசு ஒரு குடியேற்றக்காரர்களின் அரசாகும். அது பலஸ்தீன உரிமையை மற்றும் சுதந்திரத்தை ஒருபோது ஏற்கப்போவதில்லை.
அது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்து தன்னாட்சியை வழங்கப்போவ தில்லை” என்று அவர் கூறினார். மற்றொரு பலஸ்தீன அமைப்பான பலஸ்தீன விடுதலைக்கான முன்னணி, இந்த அமைதி முயற்சி பலஸ்தீனத்தின் நலனுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சித்துள்ளது. “கடந்த இருபது ஆண்டு இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை வெறும் பூஜ்யத்தில் முடிந்தது. அது இஸ்ரேலின் குடியேற்றங்களை விரிவுபடுத்த மாத்திரமே உதவியது” என்று பலஸ்தீன விடுதலை முன்னணியின் பேச்சாளர் ஜமில் மசர் குறிப்பிட்டார்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/22/?fn=w1307227 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.