......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 18 July 2013

மாகாணசபை முறைமை வேண்டாம்: மாநாயக்க தேரர்கள்

மாகாணசபை முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் அடங்கிய அகில இலங்கை பௌத்த சம்மேளனம் அறிவித்துள்ளது. 

'மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது. அவ்வாறு வழங்கப்பட்டால் இந்த நாடு துண்டு துண்டாகிவிடும். இந்த பிரச்சினையில், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ பயப்பட வேண்டிய அவசியமில்லை. 1987ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று உடுகம ஸ்ரீ புத்தரகித அஸ்கிரிய தேரர் தெரிவித்துள்ளார். 

'மாகாணசபை பிரச்சினைக்கு காரணம் யார்?. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவே இந்த பிரச்சினைக்கு காரணம். இந்த நடவடிக்கைக்கு அப்போதிருந்த மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், அரசியல் பலத்தை உறுதிபடுத்திக்கொள்வதற்காக இந்தியாவுடன் இணைந்து ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொண்டார் ஜே.ஆர்.ஜயவர்தனா. மாகாணசபை முறைமையை ஏற்படுத்தினார். 

இருப்பினும், அதற்கு பலரும் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர். தவறு எமது மக்களது. இன்று அப்பிரச்சினை பெரிதாகிவிட்டது. வடக்கு கிழக்குக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கொடுத்தால் மத்திய அரசாங்கத்துக்கு உள்ள அதிகாரம் என்ன? இந்த நாடு ஒன்பது துண்டுகளாக சிதறிவிடும். 

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கட்சித் தலைவர்களே. அவர்கள் அனைவரும் அவரவரது அரசியல் பலத்தை நிலைநாட்டிக்கொள்வதற்காக இவ்வாறான பிரச்சினைகளுக்கு இடமளித்து விட்டார்கள். நான் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவன் இல்லை. எனக்கு எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை. மாகாணசபை முறைமை ஒழிக்கப்பட்டு ஐக்கியப்பட்ட நாடொன்று உருவாக்கப்படல் வேண்டும்' ' என்றும் புத்தரகித தேரர் குறிப்பிட்டார். 

'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, விருப்பு வாக்கு முறைமை மற்றும் மாகாணசபை முறைமை ஆகியன முழுமையாக நீக்கப்படல் வேண்டும். அதற்காக, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்று திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மல்வத்து தேரர் தெரிவித்துள்ளார். 

'மாகாணசபை முறைமையில் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் இருப்பின், 13ஆவது திருத்தத்திலிருந்து அவற்றை நீக்கிவிட வேண்டும். இந்த நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களால் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. அவர்கள் அவரவர் நலனுக்காகவே செயற்படுகின்றனர். அதனால், மாகாணசபை முறைமையை ஒழிப்பது தான் நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்று சுமங்கல தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75433-2013-07-17-15-43-11.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE