......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 23 July 2013

இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுக்கு திரும்ப பலஸ்தீன் நிபந்தனை 80 பலஸ்தீன கைதிகள் விடுதலை

இஸ்ரேலுடனான நேரடி அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் முன் பல நிபந்தனைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என பலஸ்தீன பதாஹ் சிரேஷ்ட அதிகாரி நபில் ஷாத் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவது இரண்டு கட்டங்களில் தங்கியுள்ளது. இதற்கு அமெரிக்காவின் இணக்கத்தை கோருவோம். அவர்கள் இணங்கினால் அடுத்த கட்டமான ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு செல்வோம். பூர்வாங்க பேச்சுவார்த்தையில் நேரடி பேச்சுவார்த்தைக்கான விதிகள் மற்றும் சரத்துகளை வொஷிங்டன் வகுக்கவுள்ளது” என்று நபில் ஷாத் கூறினார்.
நாம் கேட்பது கிடைக்காத பட்சத்தில் பேச்சுவார்த்தைக்கு செல்லப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலின் சட்ட விரோத குடியேற்றங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் எடுத்த நடவடிக்கை அமெரிக்காவின் அமைதி முயற்சியில் சாதகமான பெறுபேறு கிடைக்க வாய்ப்பாக அமைந்ததாக ஷாத் கூறினார்.
பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் முன்னர் இஸ்ரேல் தனது சட்டவிரோத குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்றும் பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனினும் பலஸ்தீன நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் அரசின் உயர் மட்ட தலைவர்கள் தொடர்ந்து எதிராகவே செயற்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சியைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர் யிஸ்ரியல் கட்ஸ் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில், தாம் பலஸ்தீன தேசம் ஒன்று உருவாவதற்கு எதிரானவன் என்று கூறியிருந்தார். எனினும் அமைதிப் பேச்சுவார்த்தை மீள ஆரம்பிப்பதை கருத்தில் கொண்டு ஒரு சில பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. இந்நிலையில் நீண்ட காலம் சிறை அனுபவிக்கும் சுமார் 80 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட வுள்ளதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது.
“பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டதும் கைதிகள் விடுதலை ஆரம்பிக்கப்படும்” என இஸ்ரேல் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பிக்கு குறிப்பிட்டார். “கட்டம் கட்டமாக கைதிகளை விடுதலை செய்வது குறித்து நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். இதில் விடுவிக்கப்படவுள்ள கைதிகள் அனைவரும் 1993 ஒஸ்லோ உடன்படிக்கைக்கு முன்னர் சிறைத்தண்டனைக்கு உள்ளானவர்கள் என குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் பகுதிகளில் இஸ்ரேலின் யூதக் குடியேற்றங்கள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இஸ்ரேல் - பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 2010 ஆம் ஆண்டில் முறிவடைந்தது. இந்நிலையில் அமெரிக்க முயற்சியிலான பலஸ்தீனத்துட னான நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியை இஸ்ரேல் பிரதமர் கோரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் குடியேற்ற ஆதரவு அமைச்சர்கள் பிரதமரின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் அளவில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் தரப்பு தூதுக்குழு இன்னும் வொஷிங்டன் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன் அது குறித்து இஸ்ரேல் பிரதமர் தனது அமைச்சரவையின் அனுமதியை பெற வேண்டி ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை 28 ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த ஆதரவை பிரதமர் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அனைத்து அமைச்சர்களும் பிரதமரின் திட்டத்திற்கு ஆதரவளிப்பார்களா என்பது சந்தேகம் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று பலஸ்தீன கைதிகள் விடுவிப்பது குறித்து நெதன்யாகு அமைச்சரவையின் அனும தியை கோர வேண்டி ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - பலஸ்தீன நேரடி பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்படுவது மிக அபாயகரமானது என காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு எச்சரித்திருந்தது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/23/?fn=w1307231 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE