மகனை கைது செய்ய வீட்டிற்குச் சென்ற போது அதிகாரிகள் மீது மனைவி பாய்ச்சல்
கோடீஸ்வரர், வர்த்தகர் மொஹம்மட் ஷியாமின் படுகொலை தொடர்பாக கைதாகி தடுத்துவைக்கப் பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து வாஸ் குணவர்தனவையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக இரகசிய பொலிஸார் நேற்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவித்தனர்.
படம்: வாசித்தபட்டபந்தி |
மொஹம்மட் ஷியாமை படுகொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வாஸ் குணவர்தன நேற்று 9ஆம் திகதி மீண்டும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். சந்தேக நபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மேலதிக மாஜிஸ்திரேட் ஏ. எம். சஹாப்தீன் நேற்று உத்தரவிட்டார்.
இப்படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது குற்றவியல் சட்டத்துடன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் இணைத்துக் கொண்டிருப்பது தொடர்பாக பிரதிவாதிகள் தரப்பில் தெரிவித்திருந்த ஆட்சேபனை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று பதிலளிக்குமாறும் மேலதிக மாஜிஸ்திரேட் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இப்படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களை தடுத்து வைப்பதற்கான உத்தரவுகளுக்கு கைச்சாத்திட்டது. அவ்வுத்தரவுகளுக்குரிய ஆவணங்களின் பிரதிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் (இரகசிய பொலிஸ்) உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேக்கர தெரிவித்தார்.
வாஸ் குணவர்தனவை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளதால் சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
வாஸ் குணவர்தனவின் மகனை கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்ற வேளை வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேரா, பலமான எதிர்ப்புகளை தெரிவித்ததாகவும் கடமையைச் செய்ய விடாது தடுத்ததாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேக்கர நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தனவின் காதலி வதியும் வத்தளை, எந்தல, மருதானை வீதியலமைந்துள்ள இல்லத்துக்கும் சென்று தேடுதல் நடத்திய போதும் அவரை கைது செய்ய இயலாமல் போனதாகவும் எவ்வாறாயினும் ரவிந்து குணவர்தனவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இரகசிய பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வாஸ் குணவர்தனவின் மனைவி, அனுராத எதிரிசிங்க ஆகியோர் உபயோகித்த 11 கைத் தொலைபேசிகள் தொடர்பான முழுமையான தகவல்கள், பெற்றுக் கொண்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பான தரவுகள் அனைத்தும் அந்தந்த தொலைபேசி நிறுவனங்களின் ஊடாக வாஸ்குணவர்தன பெற்றுக்கொண் டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் போது இத்தகவல் அறியக் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.
மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொள்ளை தொடர்பான வழக்கொன்றுக்காக இத்தகவல்கள் தேவைப்படுவதாக பொய்யான தகவல்களைத் தெரிவித்தே தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து வாஸ் குணவர்தன தரவுகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
வாஸ் குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஹரிச்சந்திர, உபுல் சமரசிங்க ஆகிய இருவரே தொலைபேசி தரவுகளைத் திரட்டியுள்ளனர்.
மரணமான ஷியாமை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வாகனத்தில் சிந்தியிருந்த இரத்தம் மனித இரத்தம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஷியாமின் இரத்தம்தானா? என்பது தொடர்பாக டி. என். ஏ. பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் பமுனுசிங்கவின் வீட்டை சோதனையிட்ட போது வெற்று தோட்டா ஒன்றும் 10 துப்பாக்கிக் குண்டுகளும் கைப்பற்றப்பட்டு ள்ளன. அடுத்த சந்தேக நபரான ரங்கன திஸாநாயக்க என்பவரது வீட்டை சோதனையிட்ட போது சில உடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அஜித் பத்திரண தெரிவிக்கையில், சந்தேகநபரான வாஸ் குணவர்தனவின் குடும்பத்தினருக்கு இரகசிய பொலிஸார் தொடர்ந்தும் தொல்லை கொடுப்பதாகவும் தேவை ஏற்பட்டால் வாஸ் குணவர்தனவின் மகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
மொஹமட் ஷியாமின் படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது தனக்கு பாரிய அழுத்தங்கள் இருப்பதாகக் கூறிய இரகசியப் பொலிஸ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேக்கர, சீருடையுடன் வாக்குமூலம் அளிக்க வந்திருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தனக்கு விடுத்த அச்சுறுத்தல் எளிதில் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அதனைப் பொருட்படுத்த முடியாத ஒன்றாக விட்டுவிட முடியாது என்றும் கூறினார்.
அத்துடன் நீதிமன்றத்தினுள் அமை தியாக பூனை போன்று இருந்த வாஸ் குணவர்தனவின் மனைவி விசாரணைக் காக அதிகாரிகள் சென்ற போது அவரது சுயரூபத்தைக் காண முடியும் என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேக்கர தெரிவித்தார்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/10/?fn=n13071012 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.