நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு குழப்பத்தில்
பாராளுமன்ற மேலவைக்காக அரசு நடத்திய தேர்தல் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் புதிய அரசியலமைப்பை வரைவதற்காக தேர்வு செய்த குழுவும் சட்டவிரோதமானது என்றும் எகிப்து அரசியமைப்புக்கான உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் புதிய பாராளுமன்றம் அமையும் வரை பாராளுமன்ற மேலவை தொடர்ந்து செயற்படும் என்று தலைமை நீதிபதி மஹர் அல் பிஹைரி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் பாராளுமன்ற மேலவைக்கு சட்டவாக்க அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
எகிப்தின் இஸ்லாமிய பின்னணி கொண்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி, 100 பேர் கொண்ட அரசியல் அமைப்பு குழுவை அமைத்து புதிய அரசியலமைப்பை வரைந்தார். புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு கடந்த டிசம்பரில் நடத்தப்பட்டதோடு அது மக்களாதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அரசியலமைப்புக் குழுவை நீதிமன்றம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளதால் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் நிலை குறித்து தெளிவில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பில் ஹொஸ்னி முபாரக் அரசு கவிழ்க்கப்பட்ட பின் நடத்தப்பட்ட பாராளுமன்ற மேல் மற்றும் கீழவைகளுக்கான தேர்தல் சட்டம் முறையற்றது என தீர்ப்பளித் ததோடு சட்டவாக்க அதிகாரம் கொண்ட பாராளுமன்ற கீழவையையும் கலைத்தது.
இதனைத் தொடர்ந்தே பாராளுமன்ற மேலவைக்கு சட்டவாக்க அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு குழுவை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
சட்டவிரோதமென தீர்ப்பளிக்கப்பட்ட எகிப்து பாராளுமன்ற மேலவையில் 42 வீதமான ஆசனங்கள் எகிப்தின் பலம் வாய்ந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி வசம் உள்ளது.
எனினும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஜனாதிபதி முர்சி, ஷ¥ரா கவுன்ஸிலை தனது இஸ்லாமிய திட்டங்களை நடைமுறைப்படுத்த பயன்படுத்தி வருவதாக எதிர்த்தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதில் புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரை ஷ¥ரா கவுன்ஸில் தொடர்ந்து நீடிக்கும் என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதிலும் அரசு, நீதித்துறையிடம் கடும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு நிர்ணயித்த திகதியை நீதிமன்றம் ரத்துச் செய்ததோடு தேர்தல் நடத்துவதற்காக ஷ¥ரா கவுன்ஸில் நிறைவேற்றிய தேர்தல் சட்டத்தின் சரத்துகள் சட்டவிரோத மானது என நீதிமன்றம் இருமுறை உத்தரவிட்டது.
"இந்த தீர்ப்பு நீதித்துறையும் அரசியலும் ஒன்றை ஒன்று தலையிடும் போது ஏற்படும் நிலையை வெளிக்காட்டுகிறது. இந்த தீர்ப்பு மோசமான சட்டத்தையும் மோசமான அரசியலையுமே காட்டுகிறது" என புருகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எகிப்து அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் ஹெல்யர் குறிப்பிட்டார்.(மூலம்:http://www.thinakaran.lk/2013/06/03/?fn=w1306031 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.