'இந்திய அரசாங்கமோ அல்லது வேரெந்த நாடுகளின் அழுத்தத்தாலோ அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்' வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
'தமிழீழ விடுதலைப் புலிகளின் நாடாளுமன்றக் குழு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும். அக்குழுவின் தேவைக்கேற்பவே இந்தியா செயற்படுகிறது. ஜே.ஆர்.ஜயவர்தனா கைச்சாத்திட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முதலில் இந்தியாவே மீறியது. இலங்கை தரப்பினர் ஒப்பந்தத்தை எப்போதும் பாதுகாத்தனர்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை நகரசபையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வடமாகாணசபை தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'வடமாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்க வேண்டும். அதன் பின்னரே வடமாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும்' என்றார்.
அத்துடன், 'வடமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றால், அதன் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைத்தால் அதேவேளை கிழக்கிலே முஸ்லீம் காங்கிரஸும் ஆட்சி அமைத்தால் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு இரு தரப்பினரும் வித்திட்டு விடுவார்கள்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'கிழக்கிலே பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தியடைய வைத்துள்ளோம். ஆனால் வடகிழக்கு இணைந்தால் எது தலைநகரமாக இருக்கும் என நீங்கள் அறிவீர்கள்' எனவும் சுட்டிக்காட்டினார்.
'எமது நாட்டின் எமது அரசியலமைப்புக்கு எமக்குத் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளும் உரிமை எமக்கு இருக்கின்றது. இந்திய மத்திய அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி இங்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது.
இந்த செயல் இந்தியா - இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்ய முயற்சிப்பதை தெளிவுபடுத்துகிறது' என்று அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/71247-2013-06-17-15-15-30.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.