By Kavinthan Shanmugarajah
மெசேஜிங் மற்றும் அழைப்பு வசதியை வழங்கும் வைபர் அப்ளிகேசனை சவுதி அரேபியா தடைசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டல்மொன் மார்கோ தெரிவித்துள்ளார்.
எனினும் இத்தடைக்கான காரணம் தொடர்பில் தாம் தெளிவுபடுத்தப்படவில்லையென மார்கோ தெரிவித்துள்ளார்.
வைபர் உட்பட மெசேஜிங் சேவையை வழங்கும் சில நிறுவனங்கள் தமது தகவல்களை கண்காணிப்பதற்கு அனுமதிக்கவேண்டுமெனவும், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவற்றின் மீது தடை விதிக்கப்படுமென சவுதி அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தது.

எனினும் வைபர் இதற்கு இணங்கவில்லையென டல்மொன் மார்கோ குறிப்பிடுகின்றார் . இதன் காரணமாகவே சவுதியில் வைபர் தடை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற காரணத்தை முன்வைத்தே சவுதி அரசாங்கம் பிளக்பெரி மெசெஞ்சர் சேவையை 2010 ஆம் ஆண்டு தடைசெய்யபோவதாக எச்சரித்திருந்ததுடன் அதன் சேர்வர்களை உள்நாட்டிலும் அமைக்கும் படி தெரிவித்திருந்தது. இதனூடக இலகுவாக அதனை கண்காணிக்க முடியுமென சவுதி எண்ணியிருந்தது.
ஆனாலும் தற்போது வைபர் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதில் குறிப்பிடத்தக்க ஒரு காரணியே சவுதியின் தொலைத் தொடர்பாடல் நிறுவனங்கள் இத்தகைய அப்ளிகேசன்களால் தமது வருவாயில் குறிப்பிடத்தக்க பகுதியை இழந்து வருகின்றமையாகும்.
பெருமளவிலான வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்ட சவுதி போன்ற நாட்டில் ஸ்கைப், வட்ஸ் எப், வைபர் போன்ற அப்ளிகேசன்கள் தற்போது அதிகப்படியாக உபயோகிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனால் சவுதி டெலிகொமியுனிகேசன்ஸ், மொபைலி மற்றும் சயின் போன்ற பெரிய தொடர்பாடல் நிறுவனங்கள் இத்தகைய அப்ளிகேசன்களை தடைசெய்யும் படி அந்நாட்டு அரசைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதே காரணத்திற்காகவே ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஸ்கைப், வைபர் போன்றவற்றின் முக்கிய சில வசதிகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தடைக்கான மற்றுமொருகாரணமாக சவுதி அரேபியா சமூக வலையமைப்புகள் மெசேஜிங் அப்ளிகேசன்கள் மீது கொண்டுள்ள பயத்தைக் குறிப்பிடலாம் காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியின் போது சமூகவலையமைப்புகள் மற்றும் மெசேஜிங் அப்ளிகேசன்கள் முக்கிய பங்கு வகித்திருந்தன.

எனவே தனது நாட்டிலும் அத்தகைய புரட்சிகள் ஏற்படுவதைத் தடுக்க சவுதி தற்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
இவற்றுக்கும் மேலதிகமாக மற்றுமொரு விடயத்தை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது வைபர் மீடியா நிறுவனமானது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு முயற்சியாண்மையாகும்.
எனவே இஸ்ரேல் இதன் மூலம் தமது நாட்டினை உளவுபார்ப்பதாக அந்நாடு அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஈரானும் இதேபோன்றதொரு தடையை முன்னர் விதித்ததாக வைபர் மீடியா தெரிவிக்கின்றது.
முற்றிலும் அரசியல் நோக்கத்திற்காகவே இத்தடை ஏற்படுத்தப்பட்டதாகவும் இதேபோன்றதொரு நிலையே சவுதியில் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
எவ்வாறு இருப்பினும் தாம் இத்தடையிலிருந்து மீண்டுவருவோமென அந்நிறுவனத்தின் தலைவர் டல்மொன் மார்கோ தெரிவிக்கின்றார்.
வெகுவிரைவில் தமது சேவை வழமைக்கு திரும்புமென அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சவுதியின் இந்நடவடிக்கையால் அங்கு தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் இது தொடர்பான தமது எதிர்ப்பை சமூகவலையமைப்புகளின் ஊடாக வெளியிட்ட வண்ணமுள்ளனர்.
வைபர் மட்டுமன்றி வட்ஸ் எப் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே வைபரை மூலம் அவைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே தெரிகின்றது.(மூலம்: http://www.virakesari.lk/article/technology.php?vid=200 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.