தேசிய அரசியலில் தற்போதுள்ள எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்றிரவு கூடி ஆராய்திருந்த நிலையிலும் அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் எவ்வித தீர்மானங்களையும் அந்தக் கட்சி எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையக் கூட்டத்தின் போது 13 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டதுடன் இந்தச் சட்டமூலம் கிழக்கு மாகாணசபையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இத தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாகயகமான நாடாளுமன்ற உறுப்பினர் ஹசனலியைத் தொடர்பு கொண்டபோது, இன்னும் கூட்டம் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தெரிவிப்பதற்கு நீண்ட நேரம் தேவைப்படும் எனவும் கூறினார்.
கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான ஏ.எம். ஜெமீலைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து தங்களது கட்சி விலகுவது தொடர்பில் எந்தத் தீர்மானத்தையும் நாங்களாக எடுக்கப் போவதில்லை. தேவையெனில் அரசாங்கம் எம்மை நீக்கிக் கொள்ளட்டும். 13 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு கிழக்கு மாகாண சபைக்கு வரும்போது அதற்கெதிராக வாக்களிப்பது என்று எம்மால் ஏலவே எடுக்கப்பட்டிருந்த முடிவினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே நேற்றிரவு இந்தக் கூட்டம் இடம்பெற்றது எனத் தெரிவித்தார். அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் எவ்வித மாற்றங்களையும் கொண்டுவரக் கூடாது என்பது தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வருவது எனவும் நேற்றையக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது தெரிந்ததே. இதன் காணரமாக அந்தக் கட்சி அதிருப்தியை அடைந்துள்ள நிலையில் இது தொடர்பில் நேற்றிரவு கூடி ஆராய்ந்துள்ளது.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5582 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.