அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரமே வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டியது அவசிமாகும்.
தற்போதைய நிலைமையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தமும் செய்யவேண்டியதில்லை. அது அவ்வாறே இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டு நேற்று அறிவித்தது.
மேலும் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஜெனிவாவுக்கும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டு அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரொா குறிப்பிடுகையில்
நாட்டில் தற்போது பாரிய அரசியல் பிரச்சினை தோன்றியுள்ளது. அதாவது அதிகாரப் பகிர்வு விவகாரங்கள் 13 ஆவது திருத்தம் அந்த திருத்தத்தின் அதிகாரங்களை குறைப்பதா? என்பது தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளன. இந்த நாட்டின் அரசியலமைப்புக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஐக்கிய தேசிய கட்சியே கொண்டுவந்தது.
அதன் பின்னர் மாகாண சபை முறைமை உருவாகியது. தேர்தல்கள் நடத்தப்பட்டன. அந்த முறைமை தொடர்கின்றது. ஆனால் தற்போது பழைய நிலைமைக்கு சென்றுள்ளனர். வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நிலைமை தோன்றியுள்ளது.
அந்த வகையில் 13 ஆம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவதா? அல்லது அதனை கைவிடுவதா? என்ற தீர்க்கமான கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம். நாட்டில் இன்று மக்களினால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு கல்வி பிரச்சினை சம்பள பிரச்சினை ஊழல் சட்டத்தின் வீழ்ச்சி என பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கே இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
முதலில் ஆளும் கட்சிக்குள் இருக்கின்ற கட்சிகளுக்குள்ளேயே 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஒரு இணக்கப்பாடு இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. இந்தவகையில் நாட்டில் மீண்டும் இனவாதம் தூண்டப்படுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. அது நாட்டுக்கு நல்லதல்ல. பிரபாகரன் யுத்தத்தினால் அடைய முயற்சித்த நோக்கத்தை யுத்தம் இல்லாமல் அடைவதற்கான பின்னணியை அராசங்கமே உருவாக்கும் நிலைமை காணப்படுகின்றது.
13 ஆவது திருத்தம் குறித்தும் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அரசாங்கம் இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஜெனிவாவுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும்.
இல்லாவிடின் ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள புதிய அரசிலமைப்பு வரைபு தொடர்பில் பேச்சு நடத்தலாம். அதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது. எவ்வாறெனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது.
17 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டவுடன் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. பொலிஸ் ஆணைக்குழு இல்லாததன் காரணமாக பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பதனையும் 18 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யவேண்டும் என்பதனை ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்துகின்றது.
இதேவேளை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரமே வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். தற்போதைய நிலைமையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தமும் செய்யவேண்டியதில்லை. அது அவ்வாறே இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஐக்கிய தேசிய கட்சியே இந்த சட்டத்தை கொண்டுவந்தது. எனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை அவ்வாறே வையுங்கள் என்பதனை வலியுறுத்துகின்றோம்.
ஆனால் அரசாங்கம் 13ஆம் திருத்தத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதாயின் அது தொடர்பில் எங்களுக்கு அறிவிக்கவேண்டும். எமக்கு அது தொடர்பில் அறிவித்தால் எமது நிலைப்பாட்டை முன்வைப்போம். முதலில் அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பது குறித்து எமக்கு அறிவிக்கவேண்டும். தேசிய பிரச்சினை விடயததில் ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் பொறுப்புடனே செயற்படும். ஆனால் முதலில் அரசாங்கத்தின் நகர்வு என்னவென்று தெரியாமல் எம்மால் எதனையும் கூற முடியாது என்றார்.
மெளபிம ஜனதா கட்சியின் செயலாளர் சமரவீர வீரவன்னி குறிப்பிடுகையில்
1956 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமையையடுத்து 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் பதற்ற நிலைமையை போன்றதொரு பாரதுரமான நிலைமையே தற்போது நாட்டில் உருவாகியுள்ளது. யுத்தம் முடிந்தவுடன் நாட்டில் நல்லிணக்கமும் அமைதியும் ஏற்படும் என அனைவரும் நம்பினார்கள்.
ஆனால் யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் கடந்த பின்னர் 1958 ஆம் ஆண்டுபோன்ற அரசியல் நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அன்றைய நிலைமையைவிட தற்போதைய நிலைமைகள் மோசமானதாகும். காரணம் அன்றைய நிலைமையில் சர்வதேச மயம் என்பது குறைவாக காணப்பட்டது. ஆனால் இன்று அனைத்து விடயங்களும் சர்வதேசமயமாகிவிட்டன. எமக்கு எதிராக பிரேரணைகள் வருகின்றன. எனவே இந்த விடயத்தில் அவதானதாக செயற்படவேண்டும். தற்போதைய நிலைமை நீடித்தால் அது பாரதுரமான நிலைமையையே தோற்றுவிக்கும்.
முழு உலகமும் எம்மை தற்போது பார்த்துக்கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து இந்தியா பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றது. எனவே இந்த விடயத்தில் நிலைமையை உணர்ந்து செயற்படவேண்டும். காயத்தை ஆற்றவேண்டுமே ஒழிய காயத்தை மேலும் கிளறக்கூடாது.
1956 ஆம் ஆண்டு உருவாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று மெளனித்துவிட்டது. சிறிய கட்சிகளுக்கு இடையில் ஜனாதிபதி சிக்கியுள்ளார். எனவே உண்மையான சுதந்திரக் கட்சியினர் அந்தப் பொறியிலிருந்து ஜனாதிபதியை மீட்கவேண்டும் என்றார்.
புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா குறிப்பிடுகையில்
13 ஆவது திருத்தத்தை எதிர்த்துக்கொண்டிருக்கும் சம்பிக்க மற்றும் விமல் வீவரங்ச போன்றோர் இலங்கை சீனாவின் காலணியாக மாறிக்கொண்டிருப்பது குறித்து ஏன் பேசுவதில்லை? இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக இலங்கை இலங்கை ஆகுவது குறித்து ஏன் இவர்கள் பேசுவதில்லை? எனறு வினவுகின்றோம்.
13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக வடக்குத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 2005 ஆம் ஆண்டு வடக்கு மக்கள் வாக்களிப்பதை புலிகள் தடுத்தனர். அதேபோன்று தற்போது முன்னாள் புலி உறுப்பினர்ககளை வடக்குத் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்த முற்படுகின்றனர். ஒரு வித்தியாசமும் இல்லை.
அதனால்தான் வடக்குத் தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு தேர்தல் ஆணையாளரிடம் கேட்டுள்ளோம். அவர் அதனை ஏற்றுக்கொள்வதாகதெரியவில்லை. இதன்மூலம் வடக்குத் தேர்தல் எவ்வாறு நடக்கப்போகின்றது என்று எம்மால் புரிந்துகொள்ள முடியும். எனவே வடக்குத் தேர்தலை தற்போதைய 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக நடத்தவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம் என்றார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அசாத் சாலி செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிடுகையில்
வட மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. அதற்கு பதிலாக 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதுவரை காலமும் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளை நடத்திவிட்டு வடக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அதில் திருத்தங்களை கொண்டுவர அரசச்ஙகம் முயற்சிக்கின்றது.
அதாவது வடக்கு கிழக்கும் இணைந்துவிடும் என்ற அச்சத்திலேயே மாகாணங்களை இணைவதை தடுக்கும் சட்டமூலத்தை கொண்டுவருகின்றனர். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண்ஙகளின் மக்கள் அங்கீகரித்தால் தான் இது சாத்தியமாகும். அப்படிப் பார்க்கும்போது வடக்கும் கிழக்கும் இணைய சாத்தியமில்லை. காரணம் கிழக்கில் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்தால் அவர்களே பெருமபான்மையாகிவிடுவர். அப்படியானால் எவ்வாறு இணைவது சாத்தியமாகும்?
ஆனால் முஸ்லிம் மக்களின் மீது அரசாங்கத்துக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இவ்வாறு திருத்தங்களை கொண்டுவருகின்றனர். மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் மற்றும் அவற்றின் பலவீனங்கள் நன்றாகவே அனைவருக்கும் தெரியும். அன்று வரதராஜ பெருமாள் ஈழம் குறித்து அறிவிப்பை வெளியிட்டவுடன் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச வடக்கு கிழக்கு மாகாணத்தை கலைத்துவிட்டார் என்றார்.
(மூலம்:http://www.virakesari.lk/article/local.php?vid=5312 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.