13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்தால் அதற்கு ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் துணைபோகாது என நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ. ஹஸனலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தச் சட்டம் என்பது சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் அவர்களுக்கு அதிகாரத்தை பகிரும் ஒரு தற்காலிக தீர்வாகும். இதை மீளப் பெறுவதற்கு ஒருபோதும் சிறுபான்மைச் சமூகம் அனுமதிக்காது.
இந்தத் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டாயம் எதிர்த்து வாக்களிக்கும். நாட்டில் யுத்தம் பெரும்பான்மையினருக்கு மாத்திரமே முடிவடைந்துள்ளது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை இப்போதும் யுத்தகாலத்தில் இருந்த அந்த அச்சமும் நெருக்கடியும் நிறைந்த சூழலில்தான் காணப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தற்காலிக தீர்வாக வழங்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் இரத்துச் செய்ய முனைவது கடலில் மூழ்கிக்கொண்டிருந்தவன் ஒரு தடியைப்பிடித்து தப்பிக்க முயற்சி செய்யும்போது அந்த தடியையும் பறித்தெடுத்து அவனை மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் செயலாகும்.
எனவே, சிறுபான்மைச் சமூகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதை கடுமையாக எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=4807 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.