......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

தமிழர்களுக்கு ஆதரவாக அதிகரிக்கும் போராட்டங்கள்... களத்தில் குதித்தது தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்

இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்கள் தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மட்டுமே போராட்டம் நடத்தி வந்த நிலையில்,
சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் தொடக்கி வைத்த போராட்டம் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் இலங்கை தமிழர்கள் விவகாரத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் காலவரையறையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நடக்கும் சர்வதேச மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தியும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரையுலகினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கூட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இலங்கை மீதான பொருளாதாரத் தடை, ஐக்கிய நாட்டு சபையில் கொண்டுவரப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது, தமிழர் பகுதியில் வசிக்கும் சிங்களவர்களை உடனடியாக வெளியேற்றுவது, ஜனாதிபதி ராஜபக்ஷவை போர்குற்றவாளியாக அறிவிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக திரையுலகினர். தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், பாடலாசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட 30 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இயக்குநர் அமீர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் காலை 9 மணி முதலே ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர். இயக்குநர்களின் இந்த உண்ணாவிரத போராட்டத்தால் இன்று நடைபெற இருந்த 26 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த போராட்டத்திற்கு காலை 9 மணி முதலே ஏராளமான திரையுலகினர் திரளாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டதாக இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் போராட்டத்தில் இளையராஜா, இயக்குநர்கள் அமீர், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சிம்புதேவன், சசிகுமார், ஸ்டான்லி, எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், கே.வி.ஆனந்த், பாண்டியராஜன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், தருண் கோபி, பெப்சி விஜயன், தளபதி தினேஷ், ராஜ்கபூர், நடிகைகள் சுஹாசினி, சத்யப்ரியா, குயிலி பாடல் ஆசிரியை தாமரை, விஜய் ஆண்டனி, பாகன் இயக்குநர் அஸ்லாம், எழில், சரவணன் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் இயக்குநர்கள் சங்கம் சார்பாக இன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் தீர்மானங்கள் வருமாறு,
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட ஒரு தொன்மை மிக்க தமிழ் தேசிய இனம், பேரினவாத அரசால் அழித்தொழிக்கப்பட்ட அவலத்தை உலக சமூகம் கண்மூடி வேடிக்கை பார்த்தது. காட்டைச் சீர்திருத்தி நாடாக்கிய தமிழன், மேட்டைச் சமன் செய்து நிலமாக்கிய தமிழன் இலங்கையின் பொருளாதாரம் தலை நிமிர தரைநோக்கி தலைகுனிந்து தன் இடுப்பொடிய உழைத்த தமிழன், இன்று கிணறுகளிருந்தும், வயல்களிலிருந்தும், வாழ்விடங்களிலிருந்தும் பிணங்களாக தோண்டி எடுக்கப்படுகிறான். "உங்களைப்போல் எங்களையும் வாழவிடுங்கள்" என கேட்டதற்காக ஓர் இனமே பேரழிவைச் சந்தித்திருக்கிறது.
இந்த நூற்றாண்டின் பாரிய மானிடப் பேரவலத்தை மனச்சாட்சி உள்ள மனிதநேயமிக்க சமூகம் இனிமேலும் கண்ணவிழித்து வாய்மூடி மௌன சாட்சியாக பார்த்திருக்கக்கூடாது.
உலகிலேயே விதவைகள் அதிகமுள்ள நாடு இலங்கை. மனநிலை பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் காணப்படும் நாடு இலங்கை. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை அதிகம் கொண்டிருக்கும் நாடு இலங்கை. எனவே,
1. இலங்கையுடன் உள்ள தூதரக உறவை இந்திய அரசு முறித்துக்கொள்ள வேண்டும்.
2. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும்.
3. போர்க்குற்றவாளி ராஜபக்ஷவை சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
4. ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
5. வாக்கெடுப்பு நடத்த ஏதுவாக இலங்கையில் தமிழர் பகுதியில் திணிக்கப்பட்டிருக்கும் சிங்களவர்களின் குடியேற்றத்தையும், சிங்கள இராணுவத்தையும் உடனே வெளியேற்ற இலங்கையை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும்.
6. இனப்படுகொலையை செய்த இலங்கையுடனான உறவை இந்தி அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
7. இலங்கை ஓர் இனப்படுகொலை செய்த நாடு. ஜனாதிபதி ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என இந்தியா அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படன.
இயக்குநர்கள் சங்கத்தைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கமும் விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நடிகர்கள் சங்கத் தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.




(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3559 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE