ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு தனது அறிக்கை மூலம் அவர் பரிந்துரைத்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்தது.
இந்தத் தீர்மானத்தில் நவநீதம்பிள்ளையின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அமெரிக்காவும் வலியுறுத்தியிருந்தது. இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையாகவும் மென்மையாகவும் கருத்துகளை சேர்க்க வலியுறுத்தியிருந்தன. இந்நிலையில், இறுதி அறிக்கை மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சர்வதேச விசாரணை கைவிடப்பட்டது. தற்போது இறுதியாக வாக்கெடுப்புக்காக முன் வைத்திருக்கும் தீர்மானத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தக் கோருவது என்பது நீக்கப்பட்டுவிட்டது. இதற்கு இந்தியாவின் அழுத்தமே காரணம் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய பிரதிநிதி அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசு, வடமாகாணத்தில் தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்றும் இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வடக்கில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் புதியதாக சில வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டை தொடக்கத்தில் மேற்கொண்டிருந்தது. ஆனால் தற்போது தீர்மானம் முற்றிலுமாக நீர்த்துப்போகச் செய்திருப்பது என்பது இந்தியா - இலங்கை இடையேயான உறவுக்கான வெற்றி. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டவர்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்றும் அனந்த பத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையோ மிகக் கடுமையான ஒரு நிலைப்பாட்டை இலங்கைக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் நிலையில் 'இந்தியாவின் செல்வாக்குதான்' இலங்கையைக் காப்பாற்றியிருக்கிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இனி இந்திய மத்திய அரசாங்கத்தால் முடியுமா என்ற நிலையில் மறுபுறம் இந்திய மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதால் தீர்மானத்தை இன்னும் வலுவானதாக்க முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என்றும் ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இறுதித் தீர்மானம் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா கருதுவது போல அவ்வளவு எளிதாக தீர்மானத்தை வலுவானதாக்கிவிட முடியாது.
அப்படியே இந்தியா தீர்மானத்தை சற்று வலுதானதாக மாற்ற விரும்பினாலும் விவாதத்தின் போது வாய்மொழியாகத்தான் கருத்து தெரிவிக்க முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (தற்ஸ்தமிழ்)
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61056-2013-03-19-12-50-17.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.