இவ்வாறு இனவாத மற்றும் மத வாத உணர்வை மக்கள் மத்தியில் தூண்டினால் மட்டுமே அதிகாரத்தில் நீடிக்க முடியும் என்று எண்ணத்தில் அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த ஏழு வருடங்களாக 13 ஆம் திருத்தத்தை பலப்படுத்தி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் என இந்தியாவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூறி வந்த ஜனாதிபதி தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளார். இது சர்வதேச ரீதியில் நாட்டை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடும். வாக்குறுதிகளை நிறைவேற்றாத நாடு என்ற பெயரை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு ஐந்து பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இவை பதிவு செய்யப்படும் சம்பவங்களாக உள்ளன. அறிக்கையிடப்படாத சம்பவங்கள இன்னும் அதிகளவில் இருக்கலாம். பொதுவாக இதுபோன்ற சம்பவங்களை வெளியில் கூற பலர் விரும்புவதில்லை. நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதுடன் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை. குற்றச் செயல்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது.
தற்போதைய நிலைமையில் திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களுக்கு எதிரான இந்த செயற்பாடுகளின் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக தெரிகின்றது. அதாவது இனவாத மற்றும் மத வாத உணர்வை மக்கள் மத்தியில் தூண்டினால் மட்டுமே நாட்டில் அதிகாரத்தில் நீடிக்க முடியும் என்று எண்ணத்தில் அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. பதவியில் நீடிப்பதற்காக மற்றுமொரு பிரச்சினையை நாட்டில் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிகின்றது. இது முறையற்ற விடயமாகும். பொதுபலசேனா என்ற அமைப்பின் அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் அமைப்பாகும். பெரும்பான்மை மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி நாட்டில் சிக்கல்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
(vidivelli)
(kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.