அன்று 2013.01.09 ம் திகதி
காலை சரியாக 8.35 மணி. என் கைத்தொலைபேசியின் அழைப்பு எழுத்து வேலையொன்றில் மூழ்கியிருந்த என் கவனத்தை கலைத்தது. அது சவூதியிலிருந்து டாக்டர் கிபாயா இப்திகாரின் அழைப்பு. நான் எதிர்பார்த்திருந்த அழைப்பு அது.
‘ஜிஹாட் பிரதர் றிஷானாவின் வீட்டு போன் வேலை செய்யுதில்லை. போனை சார்ஜ் செய்து ரெடியாக இருக்கச் சொல்லுங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் றிஷானாவை அவங்க வீட்டுக்கு பேச வைப்பேன். நான் இப்போது றியாதில் இருந்து தவாதமி ஜெயிலுக்கு போய் கொண்டிருக்கின்றேன். திரும்ப உங்களுடன் பேசுவேன். தொடர்பு துண்டிக்கப்பட்டது.
நான் றிஷானாவின் வீட்டைத் தொடர்பு கொண்ட போது அவர்களது தொலைபேசி செயலிழந்திருந்தது. அதனால் றிஷானாவின் பக்கத்து வீட்டு சகோதரர் முபாரக்கைத் தொடர்புகொண்டு றிஷானா வீட்டுக்கு தகவலை சொல்லச் சொல்லிவிட்டு நான் பரபரப்பானேன். உடனடியாக சகோதரர் மஹ்ருபை தொடர்பு கொண்டு விடயத்தை கூறிய போது அவருக்கு அத்தகவல் டாக்டர் கிபாயாவினால் ஏற்கனவே சொல்லப்பட்டு இருந்தது. றிஷானாவை விடுவிக்கும் எமது இந்த முயற்சிக்கு தலைமை தாங்கி அதை வழிநடாத்தியது சகோதரர் மஹ்ருபே. இன்றுவரை றிஷானாவின் குடும்பத்தினரை ஒழுங்குபடுத்தி பராமரிக்கும் விடயங்களையும் அவரே பொறுப்பேற்றிருந்தார்.
கடந்த 3 வாரமாக உண்மையில் நாங்கள் உள்ளுர பயந்து போயிருந்தோம். காரணம் நம் நாட்டின் சட்டமா அதிபர் தலைமையில் வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பணியக பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று சவூதி சட்டமா அதிபர், வெளிவிவகார அமைச்சு பிரதிநிதிகளை கண்டு பேசிய போது அவர்களிடம் சொல்லப்பட்ட விடயங்களே றிஷானாவுக்கு ஆபத்து நெருங்கியுள்ளதை உணர்த்தின. அதாவது ‘நாம் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டோம். எதுவுமே அந்த தாயின் மனதை மாற்றவில்லை. எனவே, எமது நாட்டின் சட்டத்தை நாம் அமுல்படுத்த வேண்டும்’ என்பதே அந்த வார்த்தைகள்.
மேற்சொன்ன தகவல் முறையாக கிடைத்தும் உண்மையில் நாங்கள் அதிர்ந்துதான் போனோம். ராஜதந்திர மட்டங்களில் சில முயற்சிகள் நடந்திருந்தாலும் எம் வெளிவிவகார அமைச்சNh ஓர் அசாதாரண மௌனத்தையே கடைப்பிடித்தது. மேற்கொள்ளப்படும் ராஜதந்திர முயற்சிகளை குழப்பிவிடலாம் என்பதால் எம்மாலும் ஊடகங்களுக்கு தகவல்களை சொல்லமுடியாதிருந்தது. ஓர் மரண அவஸ்த்தை அது. இருப்பினும் சகோதரர் மஹ்ருபின் தலைமையிலான எமது அணி, உருவாகியுள்ள புதிய நிலைமைகளின் பாரதூரத்தை உணர்ந்து பிரச்சினையின் தீவிரத்தைத் தணிக்க இயலுமான வழிகளினூடாக சில முயற்சிகளை மேற்கொண்டோம்.
நிலைமை இவ்வாறிருக்க, எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எம்மால் தேர்ந்ததெடுக்கப்பட்ட சில கௌரவங்களோ பிரச்சினையின் தன்மை புரியாது, அதன் ஆழ, அகவலம் புரியாது சுய விளம்பரத்திற்காக ஊடகங்களில் அறிக்கை விட்டுக் கொண்டு இருந்தமை எம்மையெல்லாம் அதிகம் வேதனைப்படுத்தியது. இவர்களால் எமக்கு உதவத்தான் முடியவில்லை. எம் வேதனைகளில் குளிர்காயாமலாவது இருக்கலாமல்லவா? என்ன செய்வது எல்லாம் எம் தலைவிதி
இதனிடையே 2013 ஜனவரி 5ம் திகதியன்று றிஷானா சிறைவைக்கப்பட்டிருந்த தவாதமி சிறைச்சாலைக்கு பொறுப்பான நீதிமன்றம் மரணதண்டனை உத்தரவை வழங்கியிருப்பதாக செய்தி எம்மை எட்டியது. இவ்வுத்தரவு சிறைச்சாலை நிர்வாகத்தால் எந்நேரமும் நிறைவேற்றப்படலாம் எனும் நிலை இருந்தது. நாம் அதிர்ச்சியில் உறைந்து போனோம். சமயோசிதத்துடன் அதே நேரம் விரைவாகவும் ஏதாவது செய்தாக வேண்டிய நிலை எமக்கு. எல்லாமே கைமீறியிருந்தது.
இனி பொறுப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் உடனடியாக நிலைமையை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவது எனவும் றிஷானா குடும்பத்தின் தற்போதைய நிலை மற்றும் சவூதி அல்-குதைபீ குடும்பம் மற்றும் குழந்தையின் பெற்றோருக்கு றிஷானாவின் பெற்றோர், சகோதரிகளின் வேண்டுகோள் விடுவது போன்ற ஓர் வீடியோ படக்காட்சி ஒன்று தயார் செய்வது எனவும் முடிவு செய்து அதற்கான முழுமையான முயற்சிகளில் இறங்கினோம். இத்தனைக்கும் றிஷானாவின் உம்மா, வாப்பாவுக்கோ, தம்பி, தங்கைகளுக்கோ நடந்தது எதுவும் தெரியாது. நாங்களும் அவர்கள் கவலையடைவார்கள் என்பதால் தெரியப்படுத்தவில்லை.
சகோதரர் மஹ்ரூப் அவருக்குள்ள வேலைப்பழுவுக்குள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு ராஜதந்திர ரீதியான முயற்சிகளை முன்னெடுக்க தூண்டியதுடன் சர்வதேச ஊடகங்களையும் தொடர்பு கொள்ள முழு மூச்சுடன் முயன்றார். சகோதரி டாக்டர் கிபாயா வும் இலங்கைக்கான சவுதி தூதுவராலயம் மூலமாக சில முயற்சிகளை மேற்கொண்டார். றிஷானா குடும்பத்தின் வேண்டுகோள் அடங்கிய வீடியோவை எடுக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. 7ம் திகதி பாடசாலைக்கு லீவை அறிவித்துவிட்டு Pனுகு ஐச் சேர்ந்த எமது பிரதேச ஊடக நண்பர்களான முஹம்மட் றிபான் மற்றும் றிபாஸ் ஆகியோரின் துணையுடன் றிஷானாவின் வீட்டுக்கு சென்று றிஷானாவின் தாயார், சகோதரிகள் ஆகியோரை படமெடுத்துவிட்டு, சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் தந்தையை வைத்தியசாலையின் அனுமதியினை பெற்று படமெடுத்தோம். அன்று மாலையிலே அவற்றை ஒழுங்குபடுத்தி சகோதர் மஹ்ரூபிற்கும் டாக்டர் கிபாயாவுக்கும் அனுப்பினோம்.
எமது திட்டப்படி இவ் வீடியோ படம் அரபு மொழிக்கும், ஆங்கிலத்துக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டு மரணமான சவுதி குழந்தையின் பெற்றோர், அல்-குதைபீ குடும்பம், சவுதி அரசு, மனிதாபிமான அமைப்புக்கள், சகல சர்வதேச ஊடகங்கள் என்பவற்றிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் எமக்கு உதவுவதற்கு இலங்கை ஊடக அபிவிருத்தி மன்றம் (ளுனுதுகு) முன்வந்தது. அவர்கள் எம்மால் எடுக்கப்பட்ட வீடியோ படங்களை எடிட்டிங் மற்றும் மொழிமாற்றம் செய்து 9ம் திகதி பகல் வேலையில் நிறைவு செய்திருந்தார்கள். இனி அனுப்புவதுதான் தாமதம்.
இதனிடையே தவாமி ஜெயிலில் றிஷானாவை சந்திப்பதற்காக சென்ற டாக்டர் கிபாயாவுடனும் இடையிடையே பேசிக்கொண்டோம். இது அவரது 16வது விஜயமாகும். வழமையைப் போன்றல்லாது டாக்டரின் இம்முறை சந்திப்பு எம்மைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துமிக்கதாக இருந்தது. இங்கு நாங்கள் றிஷானாவின் தண்டனைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்த இவ்வேளையில் றிஷானாவை பார்வையிட அனுமதி கிடைத்ததென்பது எமக்கு பாரிய நிம்மதியைத் தந்தது. உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் கைதிக்கு வெளியாரை சந்திக்க அனுமதி வழங்கப்படாது என்பதால் எமக்கு இவ் அனுமதி பெரிய மன ஆறுதலைத் தந்தது. மட்டுமன்றி நாட்டின் ஜனாதிபதியவர்களும் இரண்டாவது தடவையாக சவூதி மன்னருக்கு றிஷானாவின் விடுதலை தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருந்ததும் முக்கிய முன்னேற்றமாக இருந்தது.
2013.01.09 நேரம் காலை 10.50 றிஷானாவை சந்திப்பதற்கெனச் சென்ற டாக்டர் கிபாயாவின் அழைப்பு தாமதமாவதால் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். அவ்வேளையில் வாகனத்திற்கு பழுது ஏற்பட்டிருப்பதாகவும், நான் மீண்டும் தொடர்பு கொள்வதாகவும் கூறிய அவர் சிறிது நேரத்தின் பின் மீண்டும் தொடர்பு கொண்டு சிறைச்சாலையில் சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக பதற்றமான தொனியில் கூறினார். இவ்விடயம் வழமைக்கு மாற்றமாக தென்படவே குழப்பமடைந்த நான் ‘டொக்டர் ஜெயிலில் ஏதும் பிரச்சினையா’ என்று கேட்டேன். அதற்கவர் ‘நீங்கள் குழப்பமடைய வேண்டாம். றிஷானாவுக்காக துஆச் செய்யுங்கள்’ என்று திரும்ப திரும்ப 2, 3 தடவைகள் சொல்லிவிட்டார். இவை யாவும் எனக்கு அசாதாரணமையாகத் தெரியவே நானும் தெளிவுக்காக பயண ஒழுங்குகள், அனுமதி பற்றியெல்லாம் அவரிடம் கேட்க முயன்றேன். அவர் பிறகு பேசுவதாக கூறியதுடன் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டது.
நான் உடனடியாக சகோதரர் மஹ்ரூப் அவர்களை தொடர்பு கொண்டு நடந்த விடயங்களை விளக்கமாகச் சொன்னேன். அவருக்கும் டாக்டர் மூலம் சகல தகவல்களும் எத்திவைக்கப்பட்டிருந்தன. இதனிடையே நாங்கள் றிஷானாவின் விடுதலைக்கென தயாரித்திருந்த வீடியோ தொகுப்பை அவசரமாக வெளியிடும் வேலையும் எமக்கிருந்தது.
2013.01.09 அன்று பி.ப. 01.50 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு. அது றிஷானா விடயமாக ஏதும் பிரச்சினையாகியிருக்கிறதா? என வினவியது. அதனைத் தொடர்ந்து சகோதரர் மஹ்ரூப் அவர்களின் அழைப்பு வந்த போது நான் உஷாரானேன். உடனே அவர் ஏதாவது உங்களுக்கு தகவல் ஏதும் வந்ததா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து ‘இறைவா! நான் எப்படி அதை உங்களிடம் சொல்வேன்’ என்றவாறு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். நானும் சேர் என்ன நடந்தது? எனக் கேட்பதற்;கிடையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நானும் பதற்றமடைந்து சகோதரர் மஹ்ருபின் தொலைபேசியை அழைத்த போது அது நிறுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து டாக்டர் கிபாயாவைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவருடைய தொலைபேசியும் செயலிழந்து இருந்தது. எனக்கு எல்லாமே புரிந்து விட்டது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனிடையே றிஷானாவின் தாயார் எனக்கு தொலைபேசி மூலம் ‘சேர் இப்போ பீரோவில் இருந்து கோல் பண்ணினாங்க. உடனடியாக சவுதி போகும் ஒழுங்குடன் கொழும்பு வரட்டாம். றிஷானாவைப் பார்க்க ஜெயிலுக்கு கூட்டிக் கொண்டு போகப் போராங்களாம். சவுதிக்கு நீங்களும் வாங்க சேர்’ என்று கூறினார். நான் மனம் கலங்கினேன். நடந்திருக்கும் எந்த நிகழ்வும் அந்த அப்பாவிக் குடும்பத்திற்கு தெரிந்திருக்கவில்லை. அப்போது அவர்களுக்கு தெரியப்படுத்தும் மனநிலையிலும் நான் இல்லை. எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கும் கூட பதிலளிக்க சிரமப்பட்டேன். இறுதிக் கணம் வரை இந்த அனர்த்தம் நடக்கும் என நான் நம்பியிருக்கவில்லை. அந்தளவு விசாலமான முயற்சிகள் றிஷானாவுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மிக நீண்ட நேரத்தின் பின்புதான் சகோதரர் மஹ்ரூபின் தொடர்பை என்னால் பெறமுடிந்தது. எம்மால் உரையாட முடியவில்லை. வார்த்தைகள் வெளியே வர மறுத்தன. றிஷானா விடயத்தில் மிகப் பெரும் தோல்வியடைந்த மனோநிலையிலேயே நாம் இருந்தோம். எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதை தவிர வேறு ஆறுதல் எமக்கு இருக்கவில்லை.
இப்போது நேரம் பி.ப 03.10. சகோதரர் மஹ்ரூபின் அறிவுரையின் படி றிஷானாவின் வீட்டிற்கு நான் சென்றேன். அதற்கிடையில் ஊடகங்கள் மூலமாக தகவல்கள் எல்லா இடத்திற்கும் பரவியிருந்தது. ஊர்மக்களுடன் சேர்ந்து ஊடகவியலாளர்களும் அந்த வீட்டிற்கு படையெடுத்திருந்தார்கள். என்னுடன் என் நண்பர்களான பிஸ்ரி, மற்றும் ஜவாத் ஆகியோரும் வந்திருந்தனர். யாருடனும் யாரும் பேசும் தைரியத்தில் இல்லை. எல்லோருமே எங்கள் றிஷானாவுக்காக கண் கலங்கி நின்றதை அங்கு நான் கண்டேன். றிஷானாவின் தாயாரின் அழுகைக் குரல் பெரிதாக ஒலித்தது. அது றிஷானாவின் விடுதலைக்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளின் தோல்வியை சுட்டிக் காட்டுவதாகவே என்னால் உணர முடிந்தது.
நீண்ட நேரத்தின் பின்பே சகோதரி டாக்டர் கிபாயாவுடன் என்னால் உரையாட முடிந்தது. றிஷானாவுடன் நேரடியாக முகம் பார்த்து தொடர்பு கொள்ளும் ஒரேயொருவர் அவர் மாத்திரமே. அதனால் அவருக்கு அதிகப் பாதிப்பு இருந்தது. மிகவும் கலகலப்பான அவர் மிகவும் கலங்கிப் போயிருந்தார். சம்பவ தினம் இரவு 11.00 மணியளவிலேயே றிஷானாவின் இல்லத்திலிருந்து வீடு திரும்பினேன். என் மனம் முழுக்க கனத்துப் போயிருந்தது. அன்றிரவு முழுக்க என்னால் தூங்க முடியவில்லை. சகோதரர் மஹ்ரூபிற்கும் அவரின் துணைவியாருக்கும அதுவே நடந்தது. றிஷானாவிற்காக நாம் மேற்கொண்ட இந்த செயற்பாட்டிற்கு சகோதரர் மஹ்ரூபின் துணைவியாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். றிஷானா குடும்பத்தாருடன் மிக நெருக்கமான தொடர்புகளை அவர் கொண்டிருந்தார். இதனால் அவரையும் றிஷானாவின் மரணம் அதிகம் பாதித்திருந்தது.
சகோதரர் மஹ்ரூப் மனதில் ஒரு சபதம் எடுத்திருந்தார். அவர் மூதூர் வந்து திரும்பிய சில சந்தர்ப்பங்களில் கூட றிஷானாவின் வீட்டிற்கு செல்லவில்லை. றிஷானாவின் பெற்றோர் வீட்டிற்கு வருமாறு அழைக்கின்ற போதெல்லாம் ‘ஒன்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள் நபீக். நான் றிஷானாவுடன்தான் உங்கள் வீட்டிற்கு வருவேன். துஆச் செய்யுங்கள் என்று சொல்வார். றிஷானாவின் மரணத்தின் பின் நாம் நேரடியா சந்தித்த போது ‘நான் றிஷானாவுடன் வருவதாக சொல்லியிருந்தேனே. இப்போது வெரும் கையுடன் அல்லவா வந்திருக்கிறேன்’ என்று சொல்லிக் கலங்கினார்.
எல்லாமே முடிந்து விட்டது. எங்கள் எல்லோருக்கும் மனதில் ஒரு வலியிருந்தது. இந்த அநீதியை நாங்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் இறைவனின் சட்டத்தை சொல்லியல்லவா நடாத்தியிருக்கிறார்கள். உண்மையில் ஷரியாச் சட்டத்திற்கும் சவுதி அரசின் சட்டத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதை பின்வந்த பல்வேறு தகவல்கள் தெளிவாக கூறுகின்றன. எனவே இதன் உண்மைத் தன்மையை அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அறிஞர்களுக்கு உண்டு. இதன் மூலம் எம் மார்க்கம் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை நீக்க அவை உதவும்.
றிஷானாவின் மரணத்தில் எல்லோருமே பாதிக்கப்பட்டார்கள். இதில் இனம், மதம், மொழி பேதம் இருக்கவில்லை. மனிதாபிமானமே மேலோங்கி இருந்தது. இந்நல் உள்ளங்களினது அன்பார்ந்த வார்த்தைகள், பல்வேறு வழிகளிலான உதவிகளுமே பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தின் உளப் புண்களை ஓரளவு ஆற்றியிருக்கின்றது. இதனால் றிஷானா செய்த இத்தியாகத்தை நற்காரியங்களுக்கு பயன்படுத்தும் எண்ணம் எங்களில் அநேகருக்கு ஏற்பட்டது. இதனால் றிஷானாவின் பெயரால் தர்ம ஸ்தாபனம் ஒன்றை உருவாக்கும் முடிவு கொள்கை அளவில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் படி கடந்த ஜனவரி 16ம் திகதி சகோதரர் மஹ்ரூப் தலைமையில் ஆரம்ப அமர்வும் அதனைத் தொடர்ந்து சுமார் மூன்று அமர்வுகளும் நடைபெற்று முக்கியமான பல முடிவுளும் எட்டப்பட்டுள்ளன. இதன் படி
01. இத்தர்ம ஸ்தாபனம் றிஷானா நபீக் ஞாபகார்த்த ஸ்தாபனம் (Rizana Nafeek Memorial Foundation) எனும் பெயர் கொண்டு அழைக்கப்படும்
02. இவ் ஸ்தாபனத்தை இன, மத, மொழி, பிரதேச, இயக்க பேதங்களுக்கு அப்பாற்பட்டதாக இதை ஒரு சர்வதேச பரிமாணத்துடன் படிப்படியாக செயற்படச் செய்தல்.
03. இவ் ஸ்தாபனம் றிஷானா குடும்பத்தின் நலன்களை பாதுகாப்பதுடன் றிஷானா போன்று பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாகவும், அவ்வகைப் பெண்களின் குடும்பங்களுக்கு உதவுவதையும் நோக்காக கொண்டிருத்தல்.
04. றிஷானா வாழ்ந்த கிராமத்தின் வாழ்வாதாரம், அபிவிருத்தி என்பவற்றிற்காக உதவுதல்.
05. பொதுவாக மக்கள் நன்மையடையும் சமூக விவகாரங்களில் பங்கெடுத்தல்.
எங்கள் றிஷானா தன்னுடைய உயிர் தியாகத்தின் மூலம் தங்களின் குடும்பத்தை மட்டுமல்ல முழு மனித சமூகத்தின் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் காரணமாகியுள்ளார். இத்தியாகம் வீண்போகாது. அவர் போன்ற ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க பயன்படுத்துவோம். இன்ஷா அல்லாஹ் வல்ல நாயன் அவரை பொருந்திக் கொள்வானாக ஆமீன்.
(kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.