......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 February 2013

மகளிர் உலகக் கிண்ணம் : சுப்பர்-6 சுற்றுக்கு இலங்கையா, இந்தியாவா


மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடரில், இன்று ஏ பிரிவில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் மோதுகின்றன. சுப்பர்-6 சுற்றுக்கு முன்னேற, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன.

லீக் போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து அணியை, இறுதிப் பந்தில் வீழ்த்திய இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுளுக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. இதனால் மோசமான ஓட்ட சராசரியைப் பெற்று, பின்தங்கி உள்ளது. சுப்பர்-6 சுற்றுக்கு முன்னேற, இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. ஒருவேளை இப் போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில், தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.
இங்கிலாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களை எடுத்த சாமரி அத்தப்பத்து, யசோதா மெண்டிஸ் ஜோடி இன்றும் கைகொடுக்கலாம். அணித் தலைவர் சஷிகலா சிரிவர்தன, எழுச்சி காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் இலங்கை வீராங்கனைகள் அசத்தும் பட்சத்தில், இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் தொடக்கிய இந்திய அணி, 2ஆவது போட்டியில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. எனவே சுப்பர்-6 சுற்றுக்கு முன்னேற, இலங்கைக்கு எதிரான இன்றைய கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை தோல்வி அடையும் பட்சத்தில், மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள மற்றொரு போட்டியின் முடிவைப் பொறுத்து, ஓட்ட சராசரி அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

இதேவேளை, கடந்த போட்டிகளில் சதம் அடித்து அசத்திய திருஷ் காமினி, ஹர்மன்பிரீத் கௌர் இப் போட்டியிலும் கைகொடுக்கலாம். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்காக 175 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பூனம் ராத், காமினி ஜோடி இன்றும் நல்ல தொடக்கம் கொடுக்கலாம். அணித் தலைவர் மிதாலி ராஜ், அமிதா சர்மா எழுச்சி கண்டால் நல்லது.

மும்பையில் இன்று நடக்கவுள்ள மற்றொரு ஏ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தித் தீவு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக சுப்பர்-6 சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி, ஓட்ட சராசரி அடிப்படையில் தகுதி பெறலாம். ஏ பிரிவில் உள்ள நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப்பெற்று சமநிலையில் இருப்பதால், இன்றைய போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE