பாலியல் பலாத்காரம் மற்றும் அத்துமீறல்களில் மத்தியப் பிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பக (என்.சி.ஆர்.பி) புள்ளி விவரங்களின் பிரகாரம் இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு 24 ஆயிரத்து 206 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 5,724 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.
2010ஆம் ஆண்டு 22,172 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப் பட்டதில், 5,632 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு 21, 397 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 5,316 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2009-2011ஆம் ஆண்டுகளில் 9,539 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில், 2,986 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், மேற்கு வங்கத்தில் 7,010 வழக்குகள் பதிவாகியுள்ளன. 381 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 ஆண்டுகளில் 5,364 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 3,816 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அசாமில், 5,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 517 பேருக்கு மட்டும் தண்டனை கிடைத்துள்ளது.
பொலிசார் போதுமான அளவு விசாரணை நடத்தாததால், அரசு தரப்பில் போதிய சாட்சிகளை சேகரிக்க முடியவில்லை. இதுவே, குறைந்த அளவு வழக்குகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்குக் காரணம்' என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துமீறல்கள் அதிகம்
2009-2011ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 1 லட்சத்து 22 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 27,408 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது..
பலாத்கார சம்பவங்களைப் போன்றே,பாலியல் அத்துமீறல்களும் மத்தியப் பிரதேச மாநிலத்தில்தான் அதிக மாக நடைபெறுகின்றன.
மூன்றாண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தில் 19, 618 பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில்,6,091 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் 10, 651 வழக்குகள் பதியப்பட்டதில், 595 பேர் மட்டும் தண்டனை பெற்றுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 9,030 வழக்குகள் பதியப்பட்டதில் 7,958 பேர் தண்டனை பெற்றுள்ளனர். கேரளத்தில் 9,232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 718 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.