......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 19 January 2013
தமிழருக்கு எதிரான அரசியல்வாதிகளை மலையகத்துக்கு அழைத்து வருவது வெட்கக்கேடானது : ம.மா.சபை உறுப்பினர் இராஜரட்ணம்
By V.Priyatharshan பெரும்பான்மையினருக்கு சார்பாக செயற்படும் சில இனவாத அரசியல்வாதிகள் மலையக மக்களை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஓரம்கட்ட முனைந்து வருகின்றனர். இத்தகைய பச்சோந்தி அரசியல்வாதிகளை மலையக அரசியல்வாதிகள் மலையகத்திற்கு அழைத்து வந்து மாலையணிவித்து கௌரவித்து வருவது வெட்கக்கேடான செயலாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம் தெரிவித்தார்.
நாட்டில் இனவாதிகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றமை குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபான்மை மக்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. சகல மட்டங்களிலும் சிறுபான்மையினர் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். சிறுபான்மையினர் இன்னும் பல்வேறு உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் உள்ள உரிமைகளையும் இம்மக்கள் இழந்து விடுவார்களோ என்ற அச்சம் மேல் எழுந்து வருகின்றது. இதனை எம்மவர்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசியல் பிரதிநிதித்துவம் என்பது ஒரு சமூகத்தின் ஆணிவேரைப் போன்றதாகும். பெரும்பான்மை அரசியல்வாதிகள் சிலர் இனவாதத்தை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு பிழைப்பு நடத்துகின்றனர்.
இவர்களால் மக்கள் கூறு போடப்படுகின்றார்கள். இந்நிலையில் இத்தகைய இனவாதிகளுக்கு சில மலையக சிறுபான்மை அரசியல்வாதிகள் உடந்தையாக இருந்து செயற்பட்டு வருவது கேவலமாகும்.
இத்தகைய சிறுபான்மை துரோகிகள் அரசியலில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் விரட்டியடிக்கப்பட வேண்டும். சிறுபான்மை அரசியல்வாதிகள் சுயநலன்களை மறந்து சமூகநலன் கருதி செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.