ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் நீக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளராக செயற்பட்ட சேகு இஸ்ஸதீன் 1998ஆம் ஆண்டு கால பகுதியில் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
இதனையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டின்போது, கொள்கை பரப்பு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பல அதியுயர் பீட கூட்டங்களுக்கு எந்தவித காரணங்களுமின்றி தொடர்ந்து கலந்துகொள்ளாமையினால் குறித்த பதவியிலிந்து சேகு இஸ்ஸதீன் நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வெற்றிடத்திற்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான யூ.எல்.எம்.என்.முபீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் மட்டு. மாவட்ட அமைப்பாளருமான இவர் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளருமாவார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவராக கட்சியின் ஸ்தாபக பொது செயலாளரான சட்டத்தரணி அட்டாளைச்சேனை கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு பதவிகளுக்கான அங்கீகாரம் கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்குறித்த இரண்டு பதவிகள் தவிர்ந்த தேசிய தலைவர், பொது செயலாளர், தவிசாளர் மற்றும் பொருளாலர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு ஏற்கனவே உள்ளவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.