தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போவில் கடமையாற்றும் பஸ் நடத்துநர் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட சேவையினை வழங்கும் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் நடத்துநரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்ட ஏ.எல்.எம். சியாம் எனும் நடத்துநர் மீதே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அக்கரைப்பற்று 02ஆம் கட்டையிலிருந்து ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வரை இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று வார நாட்களில் சேவையில் ஈடுபடும். இது ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குப் பயணிக்கும் மாணவர்களுக்கான விசேட பஸ் சேவையாகும்.
குறித்த பஸ் வண்டியானது இன்று காலையும் வழமைபோல் போக்குவரத்தில் ஈடுபட்டது. இதன்போது, பஸ்ஸில் பயணித்த பல்கலைக்கழக மாணவர்களிடம் பயணச் சீட்டினைப் பெறுமாறு பஸ் நடத்துநர் கோரியுள்ளார். ஆனால், மாணவர்கள் தாம் பருவகாலச் சீட்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். இதற்கமைய பருவகாலச் சீட்டினை வழங்குமாறு நடத்துநர் கோரியுள்ளார். ஆயினும் மாணவர்கள் பருவகாலச் சீட்டினையும் வழங்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு, இறுதியில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தன்மீது சுமார் 10 பேர் தாக்குதலை மேற்கொண்டதாகவும், தன்னுடைய பயணச்சீட்டுப் புத்தகத்தினை தாக்குதலை மேற்கொண்டோர் சேதப்படுத்தியதோடு, அதனுள் இருந்த பணத்தில் ஒரு தொகையினை எடுத்துக் கொண்டதாகவும் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் நடத்துநர் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திலேயே பஸ்ஸினை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட நடத்துநரை பஸ்ஸின் சாரதி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி - பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நடத்துநரை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதோடு, பஸ் வண்டியினை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரிடம் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்து கொண்ட அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.