பாலமுனை தினகரன் நிருபர்
தமிழ்க் கைதிகள் விவகாரம்:

தமிழ்க் கைதிகள் விவகாரம்:
தடுப்புக் காவலிலுள்ள தமிழ் கைதிகள் விஷயத்தை காலதாமதமின்றி அணுகி உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டியிருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் சட்டத்தோடும் நீதித்துறையோடும் சம்பந்தப்பட்ட அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதிகள் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகக் குழுவினரை அமைச்சில் நேற்றுமுன்தினம் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ் வாறு கூறினார்.
சர்வதேச சமூகத்தின் பொறுப்புவாய்ந்த உறுப்பினர் என்ற முறையில் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாட்டை சரிவரப் புரிந்து கொண்டு செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்:- சிறைபிடிக்கப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழ் கைதிகளில் பாரதூரமான குற்றம் சுமத்தப்படாத, போதிய சாட்சிகளும் ஆதாரங்களும் அற்ற பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் இன்னும் சிறு தொகையினரே விசாரணையை எதிர்நோக்கி எஞ்சியிருப்பதாகவும், அவர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக நான்கு விஷேட மேல் நீதிமன்றங்கள் அவற்றை மேற்கொள்ளுமென்றும் நீதியமைச்சரும்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தற்பொழுது இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக குழுவினரிடம் தெரிவித்தார்.
கற்றிந்த பாடங்கள் மற்றும் நல்லிணனக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விஷேட செயலணி செயல்திட்டமொன்றையும் வகுத்துள்ளதோடு கால அட்டவணையொன்றின்படி படிப்படியாக அவை அமுல்படுத்தப்படுமென்றும் பிரஸ்தாப தூதுக் குழுவினரிடம் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.
நீதியமைச்சில் வியாழக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவற்றைக் குறிப்பிட்டார்.
நியூயோர்க் நகரிலிருந்து இங்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையினதும் கொலம்பியா பல்கலைக்கழகத்தினதும் இந்த உயர்மட்டத் தூதுக்குழுவுக்கு ஜப்பானின் ஐ. நா. பிரதி நிரந்தர பிரதிநிதி கசுவோ கொடாமா தலைமை தாங்குகிறார். பங்களாதேஷ், நைஜீரியா, ரொமானியா ஆகிய நாடுகளின் ஐ. நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதிகளுடன் அதன் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித்த கொஹனவும் இதில் இடம்பெற்றுள்ளார். இத்தாலி, தென்னாபிரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளின் தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர்களும் இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
வழக்குத் தாமதத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில் தமிழ் கைதிகள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் மன்னார், வவுனியா, அனுராதபுரம், கொழும்பு சிறைச்சாலை என்பவற்றில் விஷேட மேல் நீதிமன்றங்கள் மேற்கொள்வது பற்றி குறிப்பிட்ட அமைச்சர், தமிழ்க் கைதிகள் விவகாரத்தை கையாள்வதற்கென அவர்களது ஆவணங்களை 13 பேர் கொண்ட அரச சட்டத்தரணிகளை சட்டமா அதிபர் ஈடுபடுத்தியிருப்பதாகவும் சொன்னார்.
தமிழ் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து விளக்கமறிக்கும் பொழுது சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதற்கு அறவே இடமளிக்கப்படுவதில்லை யென்றும், எடுத்துக் காட்டாக இம்சைக்குள்ளாக்கப்படும் ஒருவர் எந்தவொரு விஷயத்திலும் குற்றவாளிகளாகக் காணப்படும் மற்றும் சந்தேகிக்கப்படும் பாதுகாப்புப் படையினர் பொலிஸார் சார்பில் நீதிமன்றங்களில் தோன்றி வழக்காடுவதற்கு அரச சட்டத்தரணிகளை அமர்த்துவதில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்கனவே தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எல். ரி. ரி. ஈ. ஈடுபாடு கொண்ட தமிழ் கைதிகள் விஷயத்தில் நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கும் வேளையில் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் படைத்தரப்பினர் குறித்து எவ்வாறான நடைமுறைகள் கையாளப்படுகிறது என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம் அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகள் தொடர்பில் தமது அமைச்சு பதில் கூற முடியாதென்றும் கோர்ட் மார்ஷல் எனப்படும் இராணுவ நீதிமன்றமே அதற்குப் பொறுப்பென்றும், அது பாதுகாப்பு அமைச்சைப் பொறுத்த விடயம் என்றும் கூறினார்.
சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி தூதுக்குழுவில் இடம்பெற்ற நைஜீரியாவின் ஐ. நா. பிரதி நிரந்தர பிரதிநிதி உஸ்மான் ஷர்க்கி கேட்ட போது அவருக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம் தாம் இந் நாட்டின் சிறுபான்மை சமூகம் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் அரசியலில் உரிய இடம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்றார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.