......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 11 December 2012

சர்வஜன வாக்கெடுப்பு முடியும்வரை எகிப்தில் பாதுகாப்பை பலப்படுத்த ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவு


எகிப்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி அரச சொத்துக்களை பாதுகாக்கும்படி ஜனாதிபதி மொஹமட் முர்சி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவரும் வரை சிவிலியன்களை கைது செய்யவும் இராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் அமைப்புக்கான வாக்கெடுப்பை எதிர்த்து முர்சி எதிர்ப்பாளர்கள் மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எனினும் எதிர்ப்பாளர்களின் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணியின் பேச்சாளர்களில் ஒருவரான சமாஹ் அஷ¥ர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறும் போது, “தேசிய மீட்பு முன்னணி சர்வஜன வாக்கெடுப்பை முழுமையாக நிராகரிக்கிறது. இது ஒரு முறையற்ற சர்வஜன வாக்கெடுப்பாகும். இதனால் நாட்டில் மேலும் குழப்பங்களே அதிகரிக்கும்.
எனவே, எகிப்து மக்கள் இதற்கு எதிராக தலைநகரில் இருக்கும் அனைத்து சதுக்கங்களிலும் ஒன்றுதிரண்டு செவ்வாய்க்கிழமை முதல் தமது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி தொடர்ந்து மக்களின் கோரிக்கையை மதிப்பதில்லை” என்றார்.
ஏற்கனவே ஜனாதிபதி தமக்கு வரம்பற்ற அதிகாரங்களை பெற்றுத்தரும் அரசியல் சாசன அறிவிப்பை ரத்துச் செய்த போதும், அது எதிர்ப்பாளர்களை திருப்தி அடையச் செய்யவில்லை. பதிலாக எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய அரசியல் அமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு எதிர்ப்பாளர்கள் தற்போது அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
“இந்த புதிய அரசியல் அமைப்புக்கு நாம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை எதிராகவே இருந்தோம்” என்று தேசிய மீட்பு முன்னணியின் பேச்சாளர் ஹுஸை அப்தல் கானி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்ட படி நடைபெறும் என ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மறுபுறத்தில் முஸ்லிம் சகோதரத்துவ ஆதரவு உறுப்பினர்களால் முன்னெடுக்கப் பட்ட இஸ்லாமிய வாதிகளை பெரும்பான்மையாகக் கொண்டவர்களால் வரையப்பட்ட புதிய அரசியல் அமைப்பு பெண்ணுரிமையை மறுப்பதென்றும், தனிமனித சுதந்திரத்தை இல்லாமலாக்குகிறது என்றும் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “எகிப்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத இந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னரான நிலையை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை” என எதிர்ப்பாளர் கூட்டணியைச் சேர்ந்த எகிப்து லிபரல் கட்சி தலைவர் அஹமட் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் எதிர்ப்பாளர் கூட்டணி நேற்று முன்தினம் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அதில் சர்வஜன வாக்கெடுப்பை நிராகரிக்க தீர்மானித்தனர். எனினும் அவர்கள் சர்வஜன வாக்கெடு ப்பை புறக்கணிப்பார்களா என்பது தெளிவில்லை என கூறப்படுகிறது.
எனினும் கடந்த ஞாயிற்றுக் கிழமையும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்திற்கு கூடினர். இதன் போது முர்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், “முர்சி உமது குண்டர்களை கட்டுப்படுத்து” மற்றும் “அரசு வெளியேறுவதே மக்களது கோரிக்கை” போன்ற பதாகைகள் ஏந்தி நின்றனர்.
“15 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார். ஆனால் மதவாதிகள் எம்மை ஆள்வதை அனுமதிக்க முடியாது என்பதைச் சொல்லவே இங்கு வந்தோம்” என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ஏ.பி. செய்திச் சேவைக்கு கூறினார்.
மறுபுறத்தில் சர்வஜன வாக்கெடுப்பை ஆதரிக்கும்படி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் அதன் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி மற்றும் சலபிக்களின் அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்துள்ளன. இதனையொட்டி இன்று இஸ்லாமிய வாதிகளின் படைகள் என்ற கூட்டணியின் கீழ் சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப் படவுள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் மஹ்மூத் கொஸ்லான் அறிவித்துள்ளார்.
எனவே இன்றைய தினத்திலும் முர்சி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப் பாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக் கானோர் காயம் அடைந்தனர்.
இந்த பதற்றங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி பாதுகாப்பை பலப்படுத்து மாறும் அரச கட்டடங்களை பாதுகாக் குமாறும் இராணுவத்திற்கு உத்தரவிட் டுள்ளார்.
இதனை எதிர்வரும் சர்வஜன வாக்கெடுப்பு முடிவு வெளிவரும் வரை கடைப்பிடிக்குமாறு அவர் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவு நேற்று முதல் அமுலுக்கு வந்தது.
இதனையொட்டி தம்முடன் ஒத்துழைக்குமாறு இராணுவம் பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதியின் புதிய உத்தரவின்படி சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவரும் வரையான காலப்பகுதியில் இராணுவத்திற்கு சிவிலியன்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.
மறுபுறத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் எதிர்ப்பாளர்கள் அடிக்கடி ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடுக்கும் நோக்கில் இராணுவம் ஜனாதிபதி மாளிகையின் முற்பகுதி பாரிய கொங்கிரீட் கட்களால் தடுப்புச் சுவர் எழுப்பியுள்ளது.
எகிப்தில் தற்போது இஸ்லாமிய வாதிகள் ஒருபக்கமாகவும் மிதவாதிகள், மதச்சார்பற்றோர் மற்றும் கிறிஸ்தவர், முபாரக் ஆதரவாளர்கள் மற்றொரு பக்கமாகவும் நின்று தமது எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிப்பதாலேயே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE