ஹமாஸ் தலைவர் ஆக்ரோஷம்

எதிர்கால பலஸ்தீன தேசத்திற்கு எந்த விட்டுக் கொடுப்பும் இல்லை என்றும் இஸ்ரேலை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்றும் காசா விஜயம் மேற்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால் ஆயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் முன் தெரிவித்தார்.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் பங்கேற்ற பேரணியில் ஆவேசமாக உரையாற்றிய காலித் மிஷால், பலஸ்தீனர்கள் ஒரு துண்டு நிலத்தையும் இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்ளமாட் டார்கள் என்றார். “பலஸ்தீனம் எமது தேசம் (மத்தியதரை) கடல் முதல் (ஜோர்தான்) ஆறு வரை, வடக்கில் இருந்து தெற்கு வரை எனவே அதன் ஒரு துண்டுப் பாகத்தையும் எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது. நாம் சியோனிஸத்திற்கு எதிராகவே போராடுகிறோம். யூதர்களுக்கு எதிராகவல்ல. எமது நிலத்தை ஆக்கிரமித்தோருக்கு எதிராகவே நாம் போராடுகிறோம். போராட்டத்தின் கனியாக எமக்கு தனிநாடு கிடைக்கும். அது பேச்சு வார்த்தை மூலம் ஏற்படக் போவ தில்லை” என்றும் காலித் மிஷால் குறிப்பிட்டார். 56 வயதான காலித் மிஷால் கடந்த வெள்ளிக்கிழமை கண்ணீர் மல்க காசாவில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தார். இது அவர் பலஸ்தீன மண்ணில் 45 ஆண்டுகளில் கால் பதிக்கும் முதல் சந்தர்ப்பமாகும். எகிப்தின் ரபா எல்லை ஊடாக 1.7 மில்லியன் பலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை வந்தடைந்த மிஷாலுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந் நிலையில் காசா நகரின் மேற்கில் அமைந்திருக்கும் அல் கிதாபா வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டு பாரிய பேரணி நடைபெற்றது. இதில் ஹமாஸ் பிரதமர் இஸ்மைல் ஹனியான் மற்றும் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் முஸா அபு மர்சுக்குடன் இணைந்து காலித் மிஷாலும் மேடையில் தோன்றினார்.
ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 8 தினங்கள் நீடித்த உக்கிர மோதல் இரு தரப்புக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்து இரு வாரங்களுக்குள்ளேயே காலித் மிஷால் விஜயம் அமைந்திருந்தது.
இந்த மோதலில் 174 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 6 இஸ்ரேலியர் பலியாயினர். இந்த பேரணியில் முகத்தை மூடியவாறு உரையாற்றிய ஹமாஸ் இராணுவ பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையின் பேச்சாளர், “இஸ்ரேலுடனான மோதலின் போது நாம் எமது 10 வீதமான திறனையே வெளிப்படுத்தினோம்” என்றார்.
(thinakaran)
ஏனைய பதிவுகள் ; ,
,
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.