......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

எகிப்தில் சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராக மற்றுமொரு ஆர்ப்பாட்டத்திற்கு±எதிர்ப்பாளர்கள் அழைப்பு


எகிப்தின் முதலாம் சுற்று சர்வஜன வாக்கெடுப்பில் வன்முறை இடம் பெற்றதாக கூறி எதிர்ப்பாளர்கள் இன்றைய தினத்தில் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்வரும் சனிக்கிழமை புதிய அரசியலமைப்புக்கான இரண்டாம் சுற்று சர்வஜன வாக்கெடுப்பு இடம் பெறவுள்ள நிலையிலேயே எதிர்ப்பாளர்கள் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற முதலாம் சுற்று வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்புக்கு பெரும்பான்மையானோர் ஆதரவளித்திருப்பதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி கூறியுள்ளது. இதன்படி புதிய அரசியலமைப்புக்கு பெரும்பான்மையாக 56.5 வீதமானோர் ஆதரவளித்திருப்பதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.
ஆனால் எதிர்ப்பாளர்களின் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணி, எந்த உத்தியோகபூர்வமற்ற முடிவையும் ஏற்கப்போவதில்லை என கூறியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை இடம் பெறவுள்ள இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்கு பின்னர் வெளியாகும் உத்தியோகபூர்வ முடிவுவரை காத்திருப்பதாக எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தமது சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், ஊழலை தவிர்க்கவும், முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பை புறக்கணிக்கவும் செவ்வாய்க்கிழமை (இன்று) வீதிக்கு இறங்குங்கள் என எதிர்ப்பாளர்கள் எகிப்து மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதன்போது சர்வஜன வாக்கெடுப்பு முறையற்றது. வன்முறைகள் கொண்டது எனவும் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.
மறுபுறத்தில் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி முதல் சுற்று வாக்கெடுப்பு இடம் பெற்ற 10 நிர்வாக சபைகளினதும் ஒவ்வொரு வாக்குச் சாவடி வீதம் முடிவுகளை முழுமையாக வெளியிட்டுள்ளது. இதே தரவுகளை எகிப்து ஊடகங்களும் உறுதி செய்துள்ளன. எனினும் இந்த முடிவுகளின்படி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தெளிவான வெற்றியை பெற தவறியிருப்பதாக அவதானிகள் கூறியுள்ளனர்.
எனினும் இந்த முடிவின் மூலம் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிக்க முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு காத்துள்ளது.
எனினும் எதிர்ப்பாளர் கூட்டமைப்பு தலைவர்களில் ஒருவரான மொஹமட் அல்பரதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “நாடு பிளவுபட்டுள்ளது. சட்ட ஒழுங்குகள் சீரழிந்துள்ளன. இஸ்லாமிய வாதிகள் எழுச்சி பெற்றுள்ளனர். எழுத்தறிவின்மை” தொடர்ந்தும் தடங்கலாக உள்ளது என்றார்.
மறுபுறத்தில் சனிக்கிழமை முடிவடைந்த முதல் சுற்று வாக்கெடுப்பு குறித்து விமர்சனங்களும் வெளியாகியுள்ளன. ஒரு சில வாக்குச் சாவடிகளில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், தேவைப்படும் அளவுக்கு நீதிபதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை என்றும், ஒரு சில போலி நீதிபதிகளை வாக்குச் சாவடிகளில் காணக்கூடியதாக இருந்ததாகவும், ஒரு சில வாக்குச் சாவடிகளில் பெண்கள் வாக்களிப்பது தடுக்கப்பட்டதாகவும் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேபோன்று முதல் சுற்று வாக்கெடுப்பில் மிகக்குறைவானோரே வாக்களிப்பில் பங்கேற்றதாகவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒப்பிடுகையில் குறைவானோரே வாக்குகளை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றத்திற்கு முன்னெடுப்பதற்கு முக்கிய படியாக அமைகிறது என ஜனாதிபதி மொஹமட் முர்சி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். எனினும் இந்த அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளை மீறும் தீவிர மதச் சார்புடையது என எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதனால் இந்த அரசியலமைப்பை யொட்டி கடந்த இரு வாரங்களுக்கு மேலாக ஆதரவு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் இடம் பெற்று வருகின்றன. இந்த வன்முறைகளில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE