சுஐப் எம்.காசிம்..-
ஜீல்முனை மாநகரசபை முதல்வராகப் பதவி வகிக்கும் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் அவர்கள் தனித்துவமான பல சிறப்புக்களை தமதாக்கிக் கொண்டவர். அவர் ஒரு துடிப்பான இளம் அரசியல் வாதி. அறிவும் ஆற்றலும் திறமையும் மிக்கவர். பல்துறை அனுபவமும் கொண்டவர். கல்வித்துறையிலே மேம்பட்டு கலாநிதிப்பட்டம் பெற்றவர். கல்வி முன்னேற்றம் மூலமாகவே சமூகம் தன் இலட்சியங்களை அடைய முடியும் என்ற உறுதியான கோட்பாடுடையவர்.
சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பல புதிய நடவடிக்கைகளை எடுத்தவர். அதே வேளை தொழிற்றுறையில் ஈடுபாடு கொண்ட காரணத்தால் பெருந்தொழில் அதிபராகத் தன்னை உருவாக்கிக் கொண்டார். கலாசாலை வாழ்க்கையிலும் பின்னரான சமூக வாழ்க்கையிலும் அவர் பெற்ற தலைமைத்துவ அனுபவம் அவரது வகிபாகத்தை அனைவரும் திருப்திப்படும் வகையில் மேற்கொள்ள உதவி வருகின்றது. ஏழைகள் மீது இரக்கம் கொண்டவர். சமூகப் பிரச்சினைகளை சாந்தமாக அணுகி நிவாரணம் பெற உதவும் பண்புள்ளவர். சிராஸ் அவர்கள் இனங்களுக்குள்ளே பிணக்கற்ற நல்லுறவு நிலைத்திருக்க வேண்டும் என்ற தூய நோக்கோடு பணிபுரிந்து வருகின்றார். கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் தமக்குள்ளே குரோதமும் குறைபாடும் கருத்து வேற்றுமையுமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டுமென்ற மன உறுதியோடு மாநகரசபை முதல்வராகப் பணிபுரிந்து வருகின்றார்.
மேயர் சிராஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது அபிமானம் கொண்டவர். மர்ஹ¥ம் அஷ்ரப் மீது தனியான பற்றுக் கொண்டிருந்தார். தமது 19ம் வயதிலே இடம்பெற்ற தேர்தலின்போது “அஷ்ரப் அவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று வீடு வீடாகத் திரிந்து பிரச்சாரம் செய்து அஷ்ரப் அவர்களின் வெற்றிக்கு அயராது உழைத்தார். மேயர் சிராஸ் சாய்ந்த மருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அல்ஹிலால் ம.வியில் ஆரம்பிக்கல்வியைப் பெற்ற பின் கொழும்பு சாஹிராவில் ஏ.எல். வரை கற்றார். கலாசாலையிலே தன் அபார திறமையைக் காட்டியமையால் வகுப்புத்தலைவனாய், மாணவர் தலைவனாய், விடுதியிலுள்ள மாணவத் தலைவனாய் விளங்கினார் விளையாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்டு திறமையை வெளிக்காட்டினார். பாக்தாத் இல்லத்தின் கப்டனாகத் தெரிவு செய்யப்பட்டார். அவரது குணமும் பண்புகளும் ஆசிரியர்களதும் மாணவர்களினதும் அன்பையும் பெருமதிப்பையும் பெற உதவியது.
இலண்டன் சென்று கற்றுக் கலாநிதிப்பட்டம் பெற்றார். அங்கு கற்றுக்கொண்டே தொழில் செய்த காரணத்தினால் நிதி வளத்தைப்பெற்றார். சமூகப்பற்றும் சமயப்பற்றும் கொண்டவர். மெற்றோ பொலிற்றன் எனும் கல்வி நிறுவனத்தை உருவாக்கி மாணவரின் பட்டப்படிப்புக்கு வழிசமைத்தார். மு.காவின் வவுனியா மாநாட்டில் பங்கு பற்றியதோடு அக்கட்சியுடன் இறுக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். முகாவின் மாநகரசபை வேட்பாளனாகப் போட்டியிட்டு 16,457 விருப்பு வாக்குகள் பெற்று முன்னணியில் திகழ்ந்த சிராஸ் மு.காவின் நீண்ட காலக் கனவை நனவாக்கியதோடு மாநகர முதல்வராகத் தெரிவானார். ஏழைகள் மீது இரக்கமும் அன்பும் கொண்ட காரணத்தினால் தனது ஒவ்வொரு மாதச் சம்பளத்தையும் ஓர் ஏழைக்குடும்பத்துக்கு வழங்கி பெருமை பெறுகின்றார். இந்த முதல்வர்
கேள்வி : கல்முனை மாநகரசபை மேயராக நீங்கள் சுமார் ஒரு வருடகாலமாகப் பதவி வகித்து வருகின்aர்கள். உங்கள் பணிபற்றிச் சுருக்கமாகக் கூறுங்களேன்?
பதில் : நான் ஆக 45 நாட்களுக்குள் தீவிர அரசியலுக்குள் வந்தவன். இந்த பிரதேச மக்களின் அடி நாதப்பிரச்சினைகளை நன்கறிந்தவன். என்னுடைய புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் மாநகரசபை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். மக்கள் எனக்கு வழங்கிய ஆணையை மதித்து இதய சுத்தியுடன் பணியாற்றி வருகின்றேன். இந்த மாநகரசபையை பசுமையான நகரமாக மாற்றவதே என் இலக்கு
கேள்வி : நீங்கள் முன்னெடுத்து வரும் பணிகளுக்கு ஒத்துழைப்புக் கிடைக்கின்றதா?
பதில் : நான் உழைப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பணியில் மன நிறைவு பெறவே அரசியலுக்குள் நுழைந்தேன். என் தூய பணிகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். மக்களின் பேராதரவுண்டு. ஆனால் காழ்ப்புணர்வு கொண்ட சில பிற்போக்கு சக்திகள் என் பணிகளைக் கொச்சைப்படுத்திகின்றன. அத்துடன் பல்வேறு இடைஞ்சல்கள். முட்டுக்கட்டைகளைப் போட்டு என் சீரிய பணிகளைத் தடுக்கலாம் எனபகற்கனவு காண்கின்றனர். நான் எதற்கும் சளைக்கப்போவதில்லை . எதுவரினும் என் பணி தொடரும். மக்களின் ஆதரவு எனக்கு இருக்கும்வரை இறைவன் உதவியால் என் பயணத்தை ஒருபோதும் தடுக்க முடியாது.
கேள்வி : உங்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்Zர்களே?
பதில் : ஆம். என்னை கொல்லுவதற்கு பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் காலங்களிலும் எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது. இப்போதும் எனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. முன்னர் ஒரு முறை என்னை கொலை செய்ய மேற்கொண்ட சதி முயற்சி இறைவன் உதவியால் தடுக்கப்பட்டது.
கேள்வி : அம்பாறை மாவட்டத்தில் பிரதேசவாதம் மேலோங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றதே?
பதில் : நான் படிக்கும் காலங்களில் அவ்வாறான பிரச்சினைகள் இருந்ததாகத் தெரியவில்லை. நான் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்ததாலோ என்னவோ பிரதேசவாத உணர்வுகள் என்னிடம் குடிகொள்ளவில்லை. எமது மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கும் பிரதேசவாதம் இருப்பதாக நான் கூறமாட்டேன். ஆனால் சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநல இருப்புக்களைத் தக்கவைக்க இத்தகைய உணர்வுகளை தூவுகின்றனர். ஆனால், பிரதேசவாதம் என்றுமே அழிவையே தரும். அம்பாறை முஸ்லிம்கள் பிரதேசவாதத்தில் ஊறியிருந்தால் கண்டி மாவட்டத்தில் பிறந்த, முகா தலைவர் ஹக்கீமை தமது மாவட்ட எம்.பியாக அதிக விருப்பு வாக்குகளுடன் தெரிவு செய்திருப்பார்களா?
கேள்வி: நீங்கள் முஸ்லிம் காங்கிரஸ் உச்ச பீட உறுப்பினரா!
பதில்: ஆம்
கேள்வி: உச்ச பீடத்துடன் கலந்தாலோசிக்காமல் மு.கா தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்வதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனரே?
பதில்: இதில் உண்மையில்லை. தலைவர் எத்தகைய முடிவுகளை மேற்கொண்டாலும் கட்சியின் உச்சபீடத்துடன் கலந்தாலோசிக்கத் தவறுவதில்லை. சில முக்கிய விடயங்களில் கட்சி அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரங்களை வழங்குவதுண்டு. அதன்படி செயற்படுகின்றார். என்னதான் இருந்தாலும் அவர் ஒரு கட்சித் தலைவர். தலைவன் தனது கட்சியை அழிவுப்பாதையில் இட்டுச்செல்ல விரும்புவானா? குற்றஞ்சாட்டுபவர்கள் யதார்த்தத்துடன் பேசவேண்டும். தலைவராக இருக்கும் ஒருவர் தற்றுணிபில் ஒரு முடிவை எடுக்க முடியாதென்றால் அது என்ன நியாயம்? தங்கள் தாளங்களுக்கேற்ப தலைவர் ஆட வேண்டுமென்று நினைப்பவர்கள் தான் இவ்வாறான கதைகளைப் பரப்புகின்றனர். என்னைப் பொறுத்தவரயில் சமகால அரசியலில் முஸ்லிம்களுக்கு வாய்த்த மிகச் சிறந்த தலைவராக ஹக்கீமை இனங்காண்கின்றேன். அவருக்கு அரசியலிலும் சமூகப் பிரச்சினைகளிலும், சர்வதேச விவகாரங்களிலும் ஆழமான பார்வையுண்டு. தெளிந்த சிந்தனையுண்டு.
கேள்வி: நீங்கள் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்Zர்களே?
பதில்: இது ஓர் அப்பட்டமான பொய். நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அண்மையில் கொழும்பில் எனது இல்லத்தில் பத்திரிகையாளர் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தேன். ஊடகவியலாளர் ஒருவர் எனது பதவி விலகல் தொடர்பான கேள்வியொன்றை தொடுத்திருந்தார். “கட்சியும் தலைமையும் தான் அதனைத் தீர்மானிக்க வேண்டுமென்று” மிகவும் தெளிவாகத் தெரிவித்திருந்தேன்.
தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர் கள் கூட அங்கு குழுமியிருந்தனர். எனினும் சில இணையத்தளங்கள் இதனை திரிபுபடுத்தி “நான் இராஜி னாமாச் செய்வேன்” என்ற தலைப்பில் கதையளந்தன. மக்கள் இதனால் குழப்பத்திற்கு ஆளாகினர். சுவையான செய்திகளைக் கொடுக்க வேண்டுமென் பதற்காக உண்மைக்கு மாற்றமான கருத்துக்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்வதே சிறந்தது. ஊடகவியலாளர்களுக்கு அந்த தார்மீகக் கடமையுண்டு.
கேள்வி: 13வது திருத்தம் ஒழிக் கப்பட வேண்டுமென்ற கோஷங்கள் முன்வைக்கப்படுகின்றதே?
பதில்: இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படை 13வது திருத்தமே. எமது கட்சியைப் பொறுத்தவரையில் 13வது திருத்தம் அவசியம் என்ற நிலைப்பாடேயுள்ளது. எமது தலைவர் ரவூப் ஹக்கீம் இது தொடர்பில் தெளிவான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
கேள்வி: ‘திவிநெகும’ சட்டமூலம் தொடர்பில் உங்கள் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின் றதே. உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: இது தொடர்பில் நான் கருத்துக்கூற விரும்பவில்லை. எனினும் மக்களுக்கு திவிநெகும விடயம் சம்பந்தமாக தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்பதே என் விருப்பம்.
கேள்வி: கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ஆஸாத் சாலி, உங்கள் கட்சியையும் தலைவரையும் தாறுமாறாக விமர்சித்து வருகின்றாரே?
பதில்: தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதற்காக கொழும்பிலிருந்து பறந்து வந்து கட்சியில் ஒட்டிக்கொண்டவர்தான் இந்த சாலி. தேர்தல் தோல்வியுடன் அவர் பறந்துவிட்டார். அவர் எமது கட்சியின் உறுப்பினருமல்ல, தொண்டருமல்ல. இவரின் விமர்சனங்களை நாம் அலட்டிக்கொள்ளவேயில்லை.
கேள்வி : கல்முனை மாநகரசபையை நீங்கள் பொறுப்பேற்ற போது எதிர்கொண்ட சவால்கள்,எதிர்கால திட்டங்கள் பற்றிக் கூறுவீர்களா?
பதில் : கல்முனை மாநகரசபை முதல்வர் பதவிக்காக நான் அடம்பிடிக்கவில்லை. இருப்பினும் அதிகூடிய விருப்பு வாக்குப்பெற்ற தகைமைக்குரியவருக்கே முதல்வர் பதவி எனும் கட்சிக் கொள்கைக்களுக்கமையவே நான் முதல்வராக்கப்பட்டேன். மேலும் கடந்த 40 ஆண்டு காலத்திலும் சாய்ந்தமருது மக்களுக்குரிய பிரதிநிதிகளுக்கு உயர் பதவிகிடைக்கவில்லை. எனவே சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டதாலும் இப்பதவிக்கான தகைமையைப் பெற்றேன். கட்சியின் தலைமைக்கும் உயர்பீடத்துக்கும் நான் என்றும் நன்றிக்குரியவன்.
நான் பதவியேற்ற போது கல்முனை மாநகரசபையின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கவில்லை. நிர்வாகம் மிக மந்த கதியில் காணப்பட்டது. மக்களின் நலன் கருதிய பணிகள் முடக்கப்பட்டிருந்தன. அதனால் புதிய விடயங்களை வகுத்து மாநகரசபைச் செயற்பாடுகளை சீர் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மாநகரசபையின் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்டதுடன் 16 கோடி வருமானம் பெறக்கூடிய செயற்றிட்டங்கள் அமுல் படுத்தப்பட்டு வருகின்றன. சாதாரணமாக குடிநீர், மின்சாரம், பாதை வசதிகள் செய்வதும் குப்பை கூளங்கள் அகற்றுவதுமே மாநகரசபையின் கடமை என்றே பல சபைகள் இயங்குகின்றன. இந்த நிலையை மாற்றி சபை சொந்த வருமானத்தில் இயங்குக் கூடிய அமைப்பில் இருக்க வேண்டும். அவ்வாறு சொந்த வருமானத்தை அதிகரித்து மக்கள் நலனைப் பேலும் வகையில் தற்போது நாம் செயற்பட்டு வருகின்றோம். கல்முனையில் சிறந்த வடிகாலமைப்புக்கான திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கல்வி முன்னேற்றத்துக்கான செயல்திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ‘மாநகரமுத்துக்கள்’ எனும் செயற்றிட்டத்தின் மூலம் க.பொ.த. சாதாரண, உயர்தரம் சித்திபெற்ற மாணவர்களைக் கெளரவிப்பதும் உயர்கல்வி பெற ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் சாய்ந்த மருதில் 1 1/2 கோடி ரூபா செலவில் சிறுவர் பூங்கா ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்முனை ஒரு வித்தியாசமான பூமி. இங்கே மூவின மக்களும் வாழ்கின்றனர். எல்லா அரசியல் கொள்கை சார்ந்தவர்களும் எல்லாக் கட்சிகளும் சார்ந்த அரசியல் வாதிகளும் உள்ளனர். கல்முனை 7 ஊர்களைக் கொண்டது. 76 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. ஒரு இலட்சத்து 20 ஆயிலும் மக்கள் வாழ்கின்றனர். எனவே வேற்றுமைக்குள் ஒற்றுமை கண்டுதான் மாநகரசபை நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டியுள்ளது. நல்ல காரியங்களை விமர்சிப்பவர்களும் கண்டனம் தெரிவிப்பவர்களும் பொதுவாக எங்கும் இருக்கிறார்கள். கல்முனையும் இதற்கு விதி விலக்கல்ல. இருந்தபோதிலும் அர்த்தமற்ற விமர்சனங்களைப் பொருட்படுத்தாது எது மக்களுக்கு நன்மை பயக்குமோ அதை நேர்மையாகவும் பற்றுறுதியுடனும் துணிச்சலுடனும் செயற்படுத்த நான் தயங்கப் போவதில்லை. ஆளணிப்பற்றாக்குறை பெரிய பிரச்சினை. எதையும் திருப்தியாக உரிய நேரத்தில் செய்து முடிக்கப் போதிய ஆளணிதேவை. சில மாநகரசபைகளிலே 40 பேருக்கு ஒருவர் என்ற விதத்தில் ஆளணி உள்ளது. கல்முனையிலே 400 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலேயே ஆளணி உள்ளது. சுமுகமான நிர்வாகத்துக்கு தடையாக உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை இயலுமான வரை நீக்கி எனது பணியை முன்னெடுத்துச் செல்கின்றேன். சபையினரும் எனக்கு நல்ல ஒத்துழைப்புத் தருகின்றனர்.
கேள்வி: விசேசமான சமூக நலத்திட்டங்கள் ஏதும் நகரசபையால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதா?
பதில்: சமூக நலத்திட்டங்கள் பலவற்றை எதிர்வரும் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். 2013இல் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடமாடும் சேவையை அமுல் படுத்த எண்ணியுள்ளோம். அத்துடன் நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்து முகமாகச் சனிக்கிழமைகளில் 1 மணிவரை மாநகரசபை இயங்கவுள்ளது. ஜெய்க்கா திட்டத்தின் மூலம் நகரின் கழிவு நீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். மாநகரசபைக்கென நவீன நிர்வாகச்செயலகம் ஒன்றை அமைக்க உத்தேசித்துள்ளோம். மாநகர எல்லைக்குள் இரவு நேர வர்த்தக சந்தையை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளோம். சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் சேவையை மதித்து கெளரவிப்பு விழா ஒன்று நடத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.