......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 31 December 2012

2007க்கு பின் எகிப்திலிருந்து காசாவுக்கு கட்டுமானப் பொருட்கள் பயணம்


காசாவுக்கு கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல எகிப்து 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஆயிரக்கணக்கான தொன்கள் கொண்ட சீமெந்து, இரும்பு போன்ற கட்டுமானப் பொருட்கள் ரபா எல்லையினூடே காசாவுக்குக் கொண்டு செல்லும் பணி நேற்று முன்தினம் தொடக்கம் ஆரம்பமானது.

காசாவின் அபிவிருத்திப் பணிக்காக கட்டார் அரசு வழங்கிய உதவிப் பொருட்களே இவ்வாறு காசாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக காசா மீது இஸ்ரேல் பொருட்களை கொண்டு செல்வதற்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை எகிப்து அரசும் கடைபிடித்து வந்தது.
எனினும் கடந்த மாதம் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எற்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து இஸ்ரேல் காசாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
காசாவுக்கான பல பொருட்களும் எகிப்துக்கும் காசாவுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும் நிலத்தடி சுரங்கப்பாதையினூடாகவே கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் காசாவுக்குக் கொண்டு செல்லப்படும் பொருட்கள் தொடர்பில் இஸ்ரேல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின் அவைகளை காசாவுக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாக எகிப்து பாதுகாப்பு அதிகாரிகள் ஏ. பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளனர்.
காசாவில் வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனை மற்றும் வீதிகளை அமைப்பதற்காக கட்டார் 400 மில்லியன் டொலருக்கும் மேற்பட்ட நிதியுதவியை அளித்துள்ளது.
இந்நிலையில் எகிப்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என ஹிமாஸ் அறிவித்துள்ளது. “காசா மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களைக் கொண்டுவர எகிப்து தனது எல்லையை நிரந்தரமாகத் திறந்து விடும் என நாம் எதிர்பார்க்கிறோம்” என்று ஹமாஸ் அரசின் ஊடக பேச்சாளர் எஹாத் அல் க்ஸைன் வலியுறுத்தியுள்ளார். கடந்த நவம்பரில் ஹமாஸ்- இஸ்ரேலுக்கு இடையில் ஏற்பட்ட 8 தின உக்கிர மோதலில் சுமார் 170 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 6 இஸ்ரேலியர் பலியாயினர். இம்மாத ஆரம்பத்தில் ஹமாஸ் தனது 25ஆவது ஆண்டு பூர்த்தியை காசாவில் கொண்டாடியது. இந்நிகழ்வுக்கு ஹமாஸ் தலைவர் காலித் மிஷால் முதல் முறையாக காசாவுக்கு வந்து பங்குகொண் டார்.
காசாவில் 2006ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்த பின் மக்கள் செறிந்து வாழும் அந்த குறுகிய பகுதிக்கான வாயில்கள் அனைத்தையும் மூடிய இஸ்ரேல் கடுமையான தடைகளை விதித்தது. இஸ்ரேலை தவிர்த்து காசாவுக்கான ஒரே எல்லையைக் கொண்ட எகிப்தின் அப்போதிருந்த ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் இஸ்ரேலின் நிலைப்பாட் டையே கடைப்பிடித்தார்.
எனினும் மக்கள் எழுச்சிக்குப் பின்னர் எகிப்தின் ஜனாதிபதியாக தேர்வான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த மொஹம்மட் முர்சி காசாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். அவர் காசாவுக்கான ரபா எல்லையை மக்கள் போக்குவரத்து க்காகவும் மனிதாபிமான விநியோகத்தி ற்காவும் திறந்துவிட்டார்.
ஜனாதிபதி மொஹமட் முர்சி நேற்று முன்தினம் ஆற்றிய பாராளுமன்ற உரையிலும், எகிப்துக்கு பலஸ்தீன விவகாரம் மிக முக்கியமானது எனக் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் காசாவுக்கு வாகனங்கள் உட்பட பெரும்பாலான பொருட்கள் எகிப்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதை யூடாகவே இன்றுவரை பெறப்பட்டு வருகிறது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE