......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

எகிப்து ஜனாதிபதி முர்சியின் அரசியல் சாசன அறிவிப்பை தொடர்ந்து உள்நாட்டில் பதற்றம்


நாடளாவிய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிபதிகள் அழைப்பு
எகிப்து ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் அரசியல் சாசன அறிவிப்பை ஜனாதிபதி மொஹமட் முர்சி வெளியிட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இந்த அறிவிப்புக்கு எதிராக அந்நாட்டு நீதிபதிகள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, முர்சிக்கு ஆதரவாக சக்திவாய்ந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நேற்று பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக தேர்வான ஜனாதிபதி முர்சி தமது முடிவே இறுதியானது என்றும் நீதித்துறை உட்பட அதற்கு எதிராக யாரும் செயற்பட முடியாது எனவும் கடந்த வியாழக்கிழமை அரசியல் சாசன அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மொஹமட் முர்சிக்கு எதிராக மிதவாதிகள் மற்றும் மதச் சார்பற்றோர் தலைநகர் கெய்ரோவில் இருக்கும் தஹ்ரியார் சதுக்கம் மற்றும் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முர்சி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என உச்ச நீதித்துறை கவுன்ஸில் அழுத்தம் கொடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை அவசரமாக கூடிய அந்த கவுன்ஸில் முர்சியின் அறிவிப்பு நீதித்துறைக்கு எதிரான நடவடிக்கை என விமர்சித்தது. இதற்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிபதிகள் அழைப்பு விடுத்தனர்.
ஜனாதிபதி முர்சி தனது புதிய அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலத்து வழக்கு தொடுனர் அப்துல் தல் மிகைட் மஹ்மூத்தை நீக்கிவிட்டு புதிய வழக்கு தொடுனராக தலத் இப்ராஹிம் அப்துல்லாவை நியமித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நீதிபதிகள் நடத்திய ஊடக மாநாட்டில், தம்மை நீக்கியதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக முன்னாள் வழக்கு தொடுனர் மிகைட் மஹ்மூத் குறிப்பிட்டார். அத்துடன் நீதித் துறைக்கு எதிராக தலையிடுவதற்கு அவர் ஜனாதிபதி முர்சிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதில் நீதிமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தும் படி நீதிபதிகள் இந்த ஊடக மாநாட்டில் கோரிக்கை விடுத்தனர். முர்சியின் புதிய அரசியல் சாசன அறிவிப்பின் மூலம் எகிப்தின் எந்த ஜனாதிபதியும் அனுபவிக்காத அதிகாரத்தை முர்சி பெற்றிருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மறுபுறத்தில் எகிப்து அரசில் பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவாக நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, நாளை பிரமாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முர்சிக்கு ஆதரவாக பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலம் ஒன்றை நடத்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. மறுபுறத்தில் முர்சிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை எதிர்ப்பாளர்களும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
புதிய அரசியல் சாசன பிரகடனத்தின்படி எகிப்தின் புதிய அரசியல் அமைப்பை வரையும் அரசியல் அமைப்பு குழுவுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும், அதனை கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தோர் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்த அரசியல் அமைப்புக் குழுவின் புதிய அரசியல் அமைப்பு கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதாக மிதவாதிகள், மதச் சார்பற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதியின் புதிய அரசியல் சாசன அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதில் கடந்த வெள்ளிக்கிழமை ஆயிரக் கணக்கானோர் தஹ்ரியார் சதுக்கத்தில் கூடி முர்சி பதவி விலகவேண்டும் என்றும் அவர் இராணுவ சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்நாட்டின் மிதவாத அரசியல்வாதியும் ஐ.நா. அணுக் கண்காணிப்பகத்தின் முன்னாள் தலைவருமான மொஹமட் அல் பரதியும் பங்கேற்றார்.
எனினும் ஒரு சில பகுதிகளில் முர்சிக்கு ஆதரவானோருக்கும் எதிரானோருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அலக்சாண்ட்ரியாவில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் 100 பேரளவில் காயமடைந்துள்ளனர். அதேபோன்று முஸ்லிம் சகோ தரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத் திற்குமான கட்சியின் அலக்சான்ட் ரியாவில் உள்ள தலைமையகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 5 நகரங்களில் மேற்படி கட்சியின் அலுவலகங்கள் முர்சி எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்க் கட்சி தொண்டர்கள் அடங்கிய குழுவொன்று கெய்ரோவில் உள்ள தஹிரியார் சதுக்கத்தில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளது. அவர்களுடன் நேற்று முன்தினம் மேலும் சில தொண்டர்கள் சேர முயற்சித்த போது, பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
எனினும் ஜனாதிபதி மொஹமட் முர்சியின் புதிய அரசியல் சாசன அறிவிப்பு புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படும் வரையே அமுலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

முர்சியின் அரசியல் சாசன பிரகடனம்

* மக்கள் எழுச்சி போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான கொலை அல்லது வன் முறையை கட்டவிழ்த்துவிட்டோருக்கு எதிரான விசாரணை மீளவும் நடத்தப்படும்.
* மொஹமட் முர்சி அதிகாரத்திற்கு வந்த பின் மேற்கொள்ளப்பட்ட அரசியல் காசன பிரகடனம், சட்டங்கள் மற்றும் கட்டளைகளை எந்த தனி நபர்களாலோ அல்லது அரசியலாலோ அல்லது அரச கட்டமைப்பாலோ ரத்துச் செய்ய முடியாது.
* பொது வழக்கு தொடுனரை நான்கு ஆண்டு தவணைக் காலத்திற்கு ஜனாதிபதியே நியமிப்பார். இவர் குறைந்த பட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.
* அரசியல் யாப்பு குழுவுக்கு புதிய அரசியல் அமைப்பை வரைவதற்கான காலக்கேடு மேலும் இரு மாதங்களால் அதிகரிக்கப்படும்.
* நீதித் துறைக்கு அரசியல் யாப்பு குழுவையோ அல்லது பாராளுமன்ற மேலவையையோ (சூரா கவுன்ஸில்) கலைக்கும் அதிகாரம் இல்லை.
* மக்கள் எழுச்சியை பாதுகாப்பதற்கும், தேசிய ஐக்கியத்திற்காகவும் அல்லது தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் ஜனாதிபதிக்கு எந்த நடவடிக்கையை எடுக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE