ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரத்தை பெற்றுத் தரும் அரசியல் சாசன அறிவிப்பை தொடர்ந்து எகிப்தில் நிலவும் பதற்ற நிலையை தணிக்க ஜனாதிபதி மொஹமட் முர்சி முயற்சித்து வருகிறார்.
இது தொடர்பில் அவர் அனைத்து தரப்பினரும் ஒரு பொதுவான தளத்திற்கு வரவேண்டும் என கோரியுள்ளதோடு, நீதிபதிகளையும் சந்தித்துள்ளார். எனினும் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
எகிப்து ஜனாதிபதியின் புதிய அரசியல் சாசன அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடு பூராகவும் வன்முறைகள் வெடித்ததோடு, அந்நாட்டு பங்குச் சந்தையும் 9 வீதத்தால் வீழ்ச்சி கண்டது.
ஆனால் இந்த புதிய அரசியல் சாசன அறிவிப்பு தற்காலிகமானது என்றும், அதிகாரத்தை தனது கையில் தக்க வைத்துக்கொள்ளும் திட்டம் இல்லை என்றும் ஜனாதிபதி முர்சி நேற்று முன்தினமும் வலியுறுத்தினார்.
அத்துடன் தற்போது பூர்த்தி யாகியுள்ள புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதும் தற்போதைய அரசியல் சாசன அறிவிப்பு ரத்தாகி ஜனநாயக முறையில் தெரிவான குழுவிடம் ஆட்சி அதிகாரம் செல்லும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனினும் முர்சிக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் தலைநகர் கெய்ரோவிலுள்ள தஹ்ரியார் சதுக்கத்தில் நான்காவது நாளாக நேற்றும் கூடாரமிட்டு தங்கியுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் தடங்கலை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு நிறுத்தப்பட்டுள்ள கலவரம் அடக்கும் பொலிஸாருடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நைல் டெல்டா பகுதியின் டமன் ஹெரர் நகரில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் பிரதான அலுவலகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஒரு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 60 பேர் காயம் அடைந்தனர். 15 வயதான இஸ்லாம் பதி என்பவரே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இது தவிர பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தமது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனினும் புதிய அரசியல் சாசன அறிவிப்பு குறித்து நாட்டின் உயரிய நீதிபதிகள் ஓர் உடன்பாட்டுக்கு வர முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் மிதவாதிகள் மற்றும் மதச் சார்பற்றோரைக் கொண்ட எதிர்ப்பாளர்கள் புதிய அரசியல் சாசன அறிவிப்பை முற்றாக ரத்துச் செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர். இந்த அரசியல் சாசன அறிவிப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முர்சியின் அரசியல் சாசன அறிவிப்பு அரசு சார்பான விடயங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று எகிப்தின் உச்ச நீதித்துறை கவுன்ஸில் வலியுறுத்தியுள்ளது. இந்த அரசியல் சாசனத்தை அந்த கவுன்ஸில் முற்றாக நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒரு சில நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சார்ந்தோரை பணிக்கு திரும்புமாறு உச்ச நீதித்துறை கவுன்ஸில் அழைப்பு விடுத்துள்ளது.
இதனையொட்டி ஜனாதிபதி முர்சியும் நேற்று உச்ச நீதித்துறை கவுன்ஸிலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பதற்ற நிலையை ஒட்டி எகிப்தின் பங்குச் சந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அந்நாட்டு பங்குச் சந்தையில் இவ்வாறு வீழ்ச்சி காண்பது இதுவே முதல் முறையாகும்.
இதனிடையே இன்றைய தினத்தில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்த முர்சி ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு மேலும் வன்முறைகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
‘அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்காக நாங்கள் மீண்டும் தஹ்ரியார் சதுக்கத்திற்கு திரும்புவோம்’ என மொஹமட் ரத்வான் என்பவர் அல்ஜkராவுக்கு கூறினார்.
ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த இஸ்லாமியவாதியான மொஹமட் முர்சி கடந்த ஆகஸ்டில் நாட்டில் பலம்வாய்ந்த முபாரக் காலத்து இராணுவ ஜெனரல்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றிய நிலையிலேயே அவர் நீதித் துறையையும் தாண்டி ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் அரசியல் சாசன அறிவிப்பை வெளியிட்டார்.
ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையில் நீடித்த உக்கிர மோதலுக்கு மத்தியஸ்தம் வகித்து யுத்த நிறுத்தத்தை அமுலுக்கு கொண்டுவந்து சர்வதேச அளவில் பாராட்டை பெற்ற முர்சி அடுத்தகட்ட நடவடிக்கையாகவே இந்த அரசியல் சாசன அறிவிப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.