இஇஸ்ரேல் - காசாவுக்கு இடையிலான மோதல்கள் 8 ஆவது நாளாகவும் நேற்று தொடர்ந்த நிலையில், மறுபுறத்தில் இருதரப்புக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்திற்கு சர்வதேச முயற்சிகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
மத்திய கிழக்கிற்கு அவசர விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இஸ்ரேல் தலைவர்களை சந்தித்தபின் மேற்குக் கரையில் பலஸ்தீன தலைவர்களையும் சந்தித்துள்ளார். பின்னர் அவர் இரு தரப்பு அமைதி முயற்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்துள்ளார்.
இஸ்ரேல் கடந்த வாரம் ஆரம்பித்த காசா மீதான உக்கிர தாக்குதல் காரணமாக இதுவரை 140 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறத்தில் காசாவில் இருந்து தொடரும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக 5 இஸ்ரேலியர் பலியாகியுள்ளனர். இதில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 20 பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு, இரு இஸ்ரேலியர் பலியாயினர்.
இந்நிலையில் ஹிலாரி கிளின்டன் நேற்றுக் காலை மேற்குக்கரையின் ரமல்லா நகரை வந்தடைந்தார். அவர் அங்கு பலஸ்தீன நிர்வாகத்தின் தலைவர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பதற்ற நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மறுபுறத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டு யுத்த நிறுத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
காசாவை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டு வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என கெய்ரோவில் இருந்து அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான உடன்படிக்கை இன்னும் கைச்சாத்தாகவில்லை என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து இஸ்ரேல் தரப்பு அந்நாட்டு வானொலியில் கூறியபோது, ‘ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையிலான புரிந்துணர்வு குறித்து கடைசி நேரத்தில் உடன்பாடு எட்டப்படாததால் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரவில்லை’ என கூறப்பட்டது.
ஹமாஸ் அலுவலகம் தாக்கு
இருதரப்பு யுத்த நிறுத்தம் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் நேற்று காலை காசாவில் இருக்கும் ஆளும் ஹமாஸ் அமைப்பின் பிரதான அலுவலகம் மீது இஸ்ரேலிய ஏவுகணை தாக்கியது. காசாவில் இருக்கும் இந்த பிரமாண்டமான கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டதாக அங்கிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் காசாவில் 100 க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்தது. இதிலே சுமார் 50 இலக்குகள் காசாவின் நிலத்தடி ரொக்கெட் தாக்குதல் தளங்கள் என கூறப்பட்டுள்ளது.
செவ்வாய் இரவு தாக்குதல்களில் 15 பலஸ்தீனர்கள் காயமடைந்ததாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவில் நேற்றைய தினம் காலையிலும் வீதிகள் எங்கும் வெறிச்சோடி கிடந்ததாகவும் கெய்ரோவில் இருந்து சாதகமான செய்தி வரும் வரை மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வீடுகளில் இருப்பதாகவும் அங்கிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் கூறியுள்ளார்.
மறுபுறத்தில் காசாவில் இருந்து கடந்த 8 தினங்களில் இஸ்ரேல் மீது 800 ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் நேற்று முன்தினத்தில் மாத்திரம் 162 ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் காசாவிலிருந்து நடத்தப்படும் பல ரொக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு முறையான அயன் டோமினூடாக இடைமறித்து அழிக்கப்பட்டு வருகின்றன.
எனினும் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஒரு ரொக்கெட் ஜெரூசலத்திற்கு அருகில் விழுந்துள்ளதோடு, மற்றுமொரு ரொக்கெட் டெல் அவிவில் கட்டடம் ஒன்றை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர, எல்லைப்புற பகுதியான எஷ்கோல் மீது காசா ரொக்கெட் தாக்கியதில் ஒரு இஸ்ரேலிய படை வீரர் கொல்லப்பட்டுள்ளார். இதேபகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதலில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் பலியானார். தெற்கு இஸ்ரேல் பகுதியில் 14 ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் குறைந்தது 11 இஸ்ரேலிய இராணுவத்தினர் காயமடைந்ததோடு 6 பொதுமக்கள் காயமடைந்தனர். கடந்த ஒருவார காலமாக இஸ்ரேல் மீது காசாவிலிருந்து நடத்தப்படும் ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலுக்கு அதிக பாதிப்பை செலுத்திய தினமாக நேற்று முன்தினம் பதிவானது.
தொடரும் அமைதி முயற்சி
இஸ்ரேல் - காசா யுத்த நிறுத்த முயற்சி தாமதிப்பதற்கு கெய்ரோ விலிருக்கும் ஹமாஸ் தரப்பினர் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து இஸ்ரேலிய அரச தரப்பு பேச்சாளர் மார்க் ரெகெல் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு கூறும் போது: தற்காலிக யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கு ஹமாஸ் அமைப்பு மகிழ்ச்சி அடையும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
நேரம் பிந்திவிட்டது. எனவே அவர்கள் மீளவும் ஓய்வெடுத்து ஆயுதங்களை திரட்டி இஸ்ரேல் மீது அடுத்த வாரமோ அல்லது அடுத்த மாதமோ ஏவுகணை தாக்குதல் நடத்த தயாராகிவிடுவர். அதற்கு நாம் அனுமதிக்க முடியாது” என்றார். இதனிடையே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் நேற்று மாலை ஜெரூசலம் சென்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் ஏனைய இஸ்ரேலிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் எகிப்து முன்வைத்துள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்த பரிந்துரை தொடர்பில் இஸ்ரேல் அரசுக்குள் முரண்பட்ட கருத்து நிலவி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் இஸ்ரேல் நாளிதழான ‘ஹாரட்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த அமைதி முயற்சிக்கு பிரதமர் நெதன்யாகு மற்றும் வெளியுறவு அமைச்சர் அவிக்டொர் லிபர்மன் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அப்பால் சில உடன்பாடுகளை எட்ட முயற்சித்து வருவதாக நம்பப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக காசாவை முடக்கி வைத்திருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை விலக்கிக் கொள்ள இதன் மூலம் ஹமாஸ் அமைப்பு எதிர்பார்த்துள்ளது. காசாவின் எல்லைகளை திறந்து விட ஹமாஸ் கோரியுள்ளது.
இதன் மூலம் ஆட்சியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு காசாவில் நிலவும் தம்மீதான அதிருப்திகளை களைய இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்துவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். மறுபுறத்தில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு ஆயுத பலத்தை அதிகரிப்பதை தடுப்பதற்கு இந்த யுத்த நிறுத்தத்தினூடாக முயற்சித்து வருகிறது. அதாவது காசாவுக்கான எகிப்து எல்லையை மூடுவதற்கு இஸ்ரேல் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது.
எதிர்வரும் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் தென்யாகு காசா பிரச்சினைக்கு தற்போது நிரந்த தீர்வொன்றை எட்டினால் அவர் வெற்றிபெறுவது உறுதியாகிவிடும் என்று நம்பப்படுகிறது. இதற்காகவே அவர் முயற்சித்து வருகிறார் என அவதானிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் காசா எல்லையில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பு அமைதி முயற்சி தோல்வி அடைந்தால் படைகளை காசாவுக்கு அனுப்ப தயாராகவே இருப்பதாக இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய தினத்திற்குள் அமைதி திரும்பும் என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நேற்று தெரிவித்தார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்த பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக ஹிலாரி கிளிண்டன் தம்மிடம் உறுதி அளித்ததாக மஹ்மூத் அப்பாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதனிடையே காசா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பலஸ்தீன தூதுக் குழு ஒன்று சீனா செல்லவுள்ளது. பலஸ்தீன மக்கள் கட்சியின் செயலாளர் நாயகம் தலைமையிலான தூதுக்குழு இன்று சீனாவை சென்றடையவுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் கூறும் போது: “காசாவின் தற்போதைய நிலைவரம் குறித்து அவதானமாக உள்ளோம்.
இது குறித்து சீனா இஸ்ரேல், பலஸ்தீனம் மற்றும் சர்வதேசம் என அனைத்து தரப்புகளுடனும் தொடர்பில் உள்ளது. குறிப்பாக யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவர இஸ்ரேலுடன் தொடர்பில் உள்ளோம். தேவைப்படும் நடவடிக்கையை எடுப்பதற்கு சர்வதேச நாடுகளுக்கு தமது முழு ஒத்துழைப்பை வழங்கும்” என்றார். ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான சீனா பலஸ்தீன உரிமைகள் குறித்து தொடர்ந்து தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.