......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 1 July 2013

மத்தியகிழக்கில் ஆட்கொல்லி வைரசும் ஹஜ் யாத்திரையும்!

By Kavinthan Shanmugarajah 
பாலூட்டிகளில் அதிக முன்னேற்றம் அடைந்த,  அறிவு வளர்ச்சி பெற்ற, பகுத்தறிவு பெற்ற விலங்காக மனித இனத்தினை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.


இம்மனித இனம் எப்போது தோன்றியது என்பதற்கு எவருக்கும் உறுதியாக இன்று வரை விடைதெரியவில்லை. ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு முடிவைச் சொல்லி நிறைவடைகின்றது அல்லது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றது.

படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்த மனித இனத்தால் கட்டுப்படுத்த முடியாமல், இன்றளவும்  அவனை ஆட்டிப்பார்ப்பது நோய்கள்.
உலகில் பல சமூகக் கட்டமைப்புகள் மாறிப்போகவும், வல்லரசுகள் வீழ்ச்சியடையவும் நோய்கள் காரணமாக இருந்துள்ளன. வரலாற்றுப் பதிவுகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.


அண்மைய உதாரணமாக சீனாவில் சார்ஸ் நோய் பரவியதைக் குறிப்பிடலாம்.
சார்ஸ் 'SARS' (Severe acute respiratory syndrome) என்றறியப்படும் ஒரு வகை நுரையீரல் அழற்சி நோயானது கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து  2003 ஜூலை வரையான காலப்பகுதியில் உலகளவில் சுமார் 8000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்படவும் 916 பேர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தது.
இந் நோய் ஏற்பட்டு சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இது பரவியதால் அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பினை இது ஏற்படுத்தியிருந்தது.

இதேபோல்  வரலாற்றின் வழி சற்று பின் நோக்கிப் பயணித்தால் மனித இனத்தை பேரழிவுக்குட்படுத்திய பல நோய்கள் தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் தற்போது மனிதர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்னர் கண்டுபிடிக்கப்படாத இப் புதிய வைரஸானது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தோனின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையானது மருத்துவ உலகத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
ஆம்,  அந்நோயின் பெயர் மத்திய கிழக்கு சுவாச நோய் (Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV).
இது கொரோனோ வைரஸ் எனும் குறிப்பாக பாலுட்டிகளையும் பறவைகளையும் பீடிக்கக் கூடிய ஒரு வைரஸ் கிருமி.  கொரோனோ வைரஸ் குடும்பம்  என்பது பல வைரஸ்களைக் கொண்டது.


இது மனிதர்களிலும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தக் கூடியது. சுவாசத் தொகுதியையும் உணவுத் தொகுதியையும் அதிகம் பீடிக்கிறது. அதன் காரணமாக சளி இருமல் நியூமோனியா, வயிற்றோட்டம் போன்றவை ஏற்படலாம். சென்ற வருட இறுதியில் எகிப்திய நோயாளிகளில் நியூமோனியா நோயினால் பீடிக்கபட்ட ஒருவரில் கண்டறியப்பட்டது.

அதனால் "மத்திய கிழக்கு சுவாச நோய்" (Middle East respiratory syndrome coronavirus)  எனப் பெயரிடப்பட்டது.

மத்திய கிழக்கு சுவாச நோய் கொரோனோ வைரஸ் என்பது ஒரு புதிய கொரோனோ வைரஸ் எனச் சுருக்கமாக தமிழில் கூறலாம்.
குறித்த கொரோனோ வைரஸ் இதற்கு முன்னர் இனங்காணப்பட்டதொன்றல்ல. இது எவ்வாறு பரவுகின்றது, இதன் தீவிரம்,பாதிப்பு என்பன தொடர்பில் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களே உள்ளதாக சர்வதேச சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி சவுதி அரேபியாவில் 60 வயதான நோயாளி ஒருவரிடமே இவ்வைரஸ் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.

எகிப்தைச் சேர்ந்த வைரஸ் துறை நிபுணரான அலி மொஹமட் சகியினால் ஜெத்தாவில் வைத்தே முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வைரஸானது சார்ஸ் நோயினை ஒத்ததென சர்வதேச சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. இது சார்ஸைப் போன்ற 6 ஆவது புதிய கொரோனோ வைரஸ் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து  (இக்கட்டுரை எழுதப்படும் வரை) இவ்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட 70 பேர் தொடர்பிலான தகவல்கள் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

ஜோர்தான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே இவ் வைரஸ் பரவத் தொடங்கியது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்தே அதிகப்படியான நோயாளர்கள் தொடர்பிலான தகவல்கள் சவுதி சுகாதார அமைச்சினால் உலக சுகாதார ஸ்பாதனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதுதவிர  பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, டுனீசியா ஆகிய நாடுகளிலும் 'மத்திய கிழக்கு சுவாச நோயினால்' பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இவர்களில் சிகிச்சைகளுக்காக அங்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இணங்காணப்பட்டோரும் , மத்திய கிழக்கில் இருந்து திரும்பி சில நாட்களில் நோய் வாய்ப்பட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வைரஸால்  பீடிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்புகளைப் பேணும் பட்சத்தில் மற்றையவர்களுக்கும் அது பரவலாம் என எச்சரிக்கப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவலின் படி பிரான்சில் வைத்தியசாலையொன்றில்  மத்திய கிழக்கு சுவாச நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தங்கியிருந்த அறையில் இருந்த இன்னொரு நபரும் அதே நோயினால் பாதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிறு நீரகம் செயலிழக்கும் அபாயமும் உள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வைரஸ் எதிலிருந்து பரவியது என்பது தொடர்பில் இதுவரை உறுதியாகத் தெரியாத போதிலும், வெளவ்வால்களில் 'மேர்ஸ் கொரோனோ வைரஸை' போன்ற வைரஸ் காணப்படுவதனை தாம் கண்டுபிடித்துள்ளதாக நெதர்லாந்தின் எராமஸ் மருத்துவ நிலைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் மத்தியகிழக்கிற்கு சென்று திரும்பிய சிலருக்கும் இந்நோய்த்தாக்கம் ஏற்பட்டமையாகும். எனினும் இது தொடர்பில் எதனையும் உறுதியாக கூற முடியாமல் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

ஹஜ் பயணமும், முன் எச்சரிக்கைகளும்

இந்நிலையில், எதிர்வரும் சில தினங்களில் உலகம் பூராகவும் உள்ள பல இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் தமது புனித கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றும் பொருட்டு சவுதியின் மக்காவில் ஒன்று கூடுகின்றனர்.

சவுதியில் இவ்வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில் அங்கு செல்லும் இலங்கையர்களில் ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டு இலங்கைக்கு வரும் பட்சத்தில் அதனால் இலங்கையிலும் இந்நோய் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது இலங்கைக்கு மட்டுமான சவால் அல்ல ஏனெனில் ஹஜ்ஜிற்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் சவுதிக்கு செல்லவுள்ளனர். எனவே இதனை உலகளாவிய ரீதியிலான சவாலாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இம்முறையும் சுமார் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் ஹஜ்ஜிற்காக இங்கிருந்து சவுதிக்கு செல்லவுள்ளனர்.

எனவே இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் (MRI) நச்சுநுண்மவியல் (virology ) பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணரான ஜூட் ஜயமாவிடம் இது தொடர்பில் வினவியிருந்தோம்.


கேள்வி : கொரோனோ வைரஸால் ஏற்பட்டுள்ள இந் நோய் அச்சுறுத்தல் தொடர்பில் சற்று விளக்கமளிக்க முடியுமா?

பதில் : ஆம், கொரோனோ வைரஸானது ஆரம்பத்தில் மத்திய கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட போதும்  தற்போது ஐரோப்ப நாடுகளிலும் இந்நோய் அறிகுறிகளுடன் நோயாளர்கள் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன், தீவிர ஆராய்ச்சிகளையும் முன்னெடுத்துள்ளது.
இது சாதாரண காய்ச்சலில் இருந்து பின்னர் அதிகரித்து நிமோனியா வரை செல்கின்றது.  பொதுவாக வேறு நோய்களால் உதாரணமாக நீரிழிவு போன்ற நோயால் பாதிப்படைந்த ஒருவருக்கு இந்நோய் ஏற்படுமானால் இதனால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது அதாவது ஏற்கனவே உள்ள நோய் நிலையினை இவ் வைரஸ் தீவிரப்படுத்துகின்றது.
இவ்வைரஸானது முன்னர் இணங்காணப்பட்ட ஒன்றல்ல என்பதனால் இது எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பில் உறுதியாக எதனையும் கூற முடியாமல் உள்ளது. விலங்கொன்றில் இருந்தே பரவியதாகக் கூறப்பட்ட போதிலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நோயால் பாதிக்கப்பட்டோரில் இறப்பு வீதம் 50% - 60% ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உண்மையான இறப்பு வீதம் 40%- 50% வரையாக உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

கேள்வி : இம்முறையும் ஹஜ் கடமைகளுக்கான இஸ்லாமியர்கள் மக்கா நோக்கியப் பயணிக்கவுள்ளனர், இதனால் எத்தகைய அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன?
பதில் :சவுதியில் இவ்வைரஸ் வேகமாக பரவிவருவதனால் அங்கு செல்லும் இலங்கையர்கள் இதனைக் காவிக்கொண்டு வரும் பட்சத்தில் இலங்கையிலும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
இதுமட்டுமல்ல மத்திய கிழக்கிற்கு பணியாட்களாக செல்லும் பல இலங்கையர்கள் தினசரி இங்கு பெருந்தொகையில் நாடு திரும்புகின்றனர் எனவே இவர்கள் மூலமும் இந்நோய் இங்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்கின்றன.
எனினும் நான் முன்னர் கூறியது போலவே இந்நோய் எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பில் இன்றளவும் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் என்னால் எதனையும் உறுதியாகக் கூறமுடியாமல் உள்ளது.

கேள்வி :உலக சுகாதார ஸ்தாபனம் இது தொடர்பில் எவ்விதம் செயற்பட்டு வருகின்றது?
பதில் : ஆம், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இவ்வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சவுதி அரேபிய அரசுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அதுபோல இலங்கை சுகாதார அமைச்சும் உலக சுகாதர ஸ்தாபனமும் இணைந்து கடந்த சில மாதங்களாக இது தொடர்பில் செயற்பட்டு வருகின்றோம்.
தனது அனைத்து கிளைகளுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் இவ் வைரஸ் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன் நோய் நிலைமையும் கண்காணித்து வருகின்றது.

கேள்வி :இலங்கை சுகாதார அமைச்சு இதனைத் தடுப்பதற்கு எவ்வித முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது?
பதில் : நிச்சயமாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
மத்தியகிழக்கிலிருந்து இலங்கைக்கு திரும்பும் நமது நாட்டவர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகள், இங்கு வந்து 10 நாட்களுக்குள் நோய்வாய்ப்படும் பட்சத்தில் அது தொடர்பாக மருத்துவ மனைகளுக்கு அறிவித்தல் விடுக்க வேண்டும்.

அத்தகைய நோயாளிகளை இனங்காணும்பட்சத்தில் அரச மற்றும் தனியார் மருத்துவ மனைகள் மருத்துவ நிலையங்கள் இது தொடர்பில் சுகாதர அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.

இது தொடர்பில் சுற்று நிருபங்களை கடந்த ஜனவரி மாதம் மருத்துவ மனைகளுக்கு சுகாதார அமைச்சு அனுப்பியுள்ளது. மேலும் தொலைபேசி மூலமும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நபரொருவர் முற்றிலும் சுகவீனமுற்ற நிலையில் மத்திய கிழக்கிலிருந்து வருவாராயின்  அங்குள்ள மருத்துவ அதிகாரிகளால் அவர் உடனடியாக பரிசோதனைக்குட்படுத்தப்படும் பொருட்டு நீர்கொழும்பு அல்லது ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவார்.
இதற்கான பொறிமுறை செயல் நிலையிலேயே உள்ளது.

இன்றுவரை இலங்கையில் எந்த நோயாளியும் குறித்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இலங்கை இதுவரை எவ்வித பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை, ஐரோப்பிய நாடுகளிலும் எவ்வித கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கவில்லை.  எனினும் இது எந்நேரத்திலும் மாறலாம்.
ஏனெனில் இந் நோய் தொடர்பில் இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையாகும்.
இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கண்காணித்து வருவதுடன், நோயைக் கண்டறிந்து கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை கொண்டுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.

இந்நோய் தொடர்பில் இம்முறை ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய பின்னர் சவுதியிலிருந்து திரும்புபவர்கள் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து குறிப்பாக நோய் அச்சுறுத்தல் நிலவும் நாடுகளிலிருந்து திரும்புகின்றவர்கள் பல விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மத்திய கிழக்கு சுவாச நோய் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் பல அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதுடன் மற்றும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

குறிப்பாக நோய் அச்சுறுத்தல் நிலவும் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்பவர்களை கருத்தில் கொண்டே இவற்றை அவ் அமைப்பு வழங்கியுள்ளது.

அறிவுறுத்தல்கள் / எச்சரிக்கைகள் 

1. சுவாச நோய் சார்ந்த அறிகுறிகளுடன் காணப்படுவோருடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல். நோய்வாய்ப்பட்டோருடன் நேரடியாக தொடர்பில் இருந்தாலோ அல்லது அவர்களது சூழலில் இருந்தாலோ அடிக்கடி கைகளை கழுவுதல். இது எம்மை அறியாவண்ணம் வைரஸ் தாக்குதலுக்குள்ளாவதை தவிர்க்கும்.

2. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்குதல். உதாரணமாக முழுமையாக சமைக்கப்படாத உணவுகளை உண்பதைத் தவிர்த்தல், தோலை உறிக்க வேண்டிய தேவையற்ற பச்சையான பழங்கள், காய்கறிகளை உட்கொள்வதைத் தவிர்த்தல்.

3. பண்ணை, காட்டு விலங்குகளைத் தொடுவதை அவற்றின் சூழலில் இருப்பதைத் தவிர்த்தல் போன்ற காரியங்களை மத்திய கிழக்கு குறிப்பாக சவுதி அரேபியாவிற்கு செல்ல வேண்டியவர்கள் தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நோய் அறிகுறிகள் / அவசிய நடவடிக்கைகள்

இவ் வைரஸால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கீழ்வரும் அறிகுறிகள் தென்படலாம் என சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
அவையாவன,
1. கடும் காய்ச்சல்
2. இருமல்/ தும்மல்
3. சுவாசிப்பதில் சிரமம்
மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர சிலருக்கு உடலின் நிர்ப்பீடன சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் வயிற்றோற்றமும் ஏற்படலாம் என சர்வதேச சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

மத்தியக் கிழக்கிலிருந்து திரும்பிய எவருக்கேனும் மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பட்சத்தில் உடனடியாக வைத்தியரொருவரை அணுகுதல் நல்லது.

மேலும் வைத்தியருக்கு தான் பயணம் செய்த விபரங்கள் தொடர்பில் தெரிவிப்பது நன்கு, இதன் மூலம் வைரஸ் வேறு நபர்களுக்கு பரவுவதை தவிர்க்க முடியும். இலங்கை சுகாதார ஸ்தாபனம் வைத்தியர்களுக்கு இது தொடர்பில் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இவ்வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு விசேட மருத்துவ கண்காணிப்பு, செயற்கை சுவாசம், அவசர சிகிச்சை என்பன அத்தியாவசியமாகும். எனவே அறிகுறிகள் தென்படுமானால் வைத்தியரை நாடுவது கட்டாயமாகும்.

இதேபோல் அந்நாடுகளில் வைத்து எவருக்கேனும் மேற்கூறிய அறிகுறிகள் காணப்படுமானால் அங்கிருந்து சில நாட்களுக்கு சிகிச்சை பெறுதல் நல்லது என அறிவுறுத்தப்படுகின்றது.

  மேலும் மற்றையோருக்கு இவ்வைரஸ் தொற்றுவதைத் தவிர்க்க இருமும் போதோ, தும்மும் போதோ கைக்குட்டையை உபயோகிப்பதுடன் மற்றையோரிடம் இருந்து விலகி இருப்பதும் நல்லதென சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் ஹஜ் யாத்திரைக்கென சவுதி செல்பவர்களோ, மத்தியகிழக்கிற்கு வேறு தேவைகளுக்காக பயணிப்பவர்களோ இந் நோய் தொடர்பில் அதிக அக்கறை கொள்ளவேண்டிய தேவை எழுந்துள்ளது.

அது தமக்காக மட்டுமன்றி தம்மை சூழ்ந்துவர்கள், உடனிருப்பவர்கள், உறவினர்கள், தமது சுற்றத்தார், அயலவர்கள், தமது நாட்டவர் என அனைவரது ஆரோக்கியம் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உள்ளது.

இது தனிநபர் நலன் மட்டும் சார்ந்த விடயமல்ல, நோய் பரவத் தொடங்கும்பட்டத்தில் அது இனம், மத பாகுபாடின்றி அனைவரையும்  தொற்றக் கூடியது எனவே அடுத்த மாதம் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் இது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்துவது அனைவருக்கு நன்மை தரும்.

ஏற்கனவே டெங்கு நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சத்தமின்றி மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், இந்நோயும் பரவினால் அது நாட்டுக்கே பெரிய சாபக்கேடாக அமைந்து விடும். எனவே இதனைத் தடுப்பதற்கான அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனமும் இந் நோய் தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிப்பாக இருப்பதன் மூலம் மற்றுமொரு பேரவலம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சும் இது தொடர்பில் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்து விட்டு பின்னர் அதனைத் தடுப்பதற்கான மார்க்கங்ளை தேடுவதை விட்டு விட்டு நோய் பரவுவதற்கு முன்னர் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை பாராட்டத்தக்கதே.

கவிந்தன் சண்முகராஜா

(மூலம்: http://www.virakesari.lk/article/feature.php?vid=115 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE