......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 June 2013

ராஜீவ் - ஜே.ஆர் ஒப்பந்தத்தை காப்பாற்றவும் : கருணாநிதி கடிதம்

இந்திய முன்னாள் பிரதமர்  ராஜீவ்காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஆகியோர்களிடையே 1987 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை காப்பாற்றுமாறு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய சிங்களர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதில் உடனே தலையிட்டு இலங்கை தமிழர்கள் நலன் காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

1987 ஆம் ஆண்டில் ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் 13ஆவது சட்டப்பிரிவில் திருத்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய சிங்கள தீவிரவாத குழுவான ஜாதிக ஹெல உறுமய என்ற அமைப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 

சிங்களர்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையே நல்லெண்ணம் மற்றும் நல்லுறவு ஏற்படும் வகையில் ஏற்பட்ட இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன். 

அதை கைவிட சிங்களர்கள் தீவிர வழிவகையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி 1925ஆம் ஆண்டில் ஏற்பட்ட மகேந்திரா ஒப்பந்தம் உள்ளிட்ட 14 உடன் படிக்கைகள் ஏளனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் கடந்த 1925 ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் அங்கு இணக்கமான சூழ்நிலையில் வாழ்வதை சிங்களர்கள் விரும்பவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதும் பின்னர் அதை திரும்ப பெறுவதும் அனைத்து சிங்கள தலைவர்களின் எண்ணமாக உள்ளது. 

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்ட திருத்தம் ஏற்பட்டது. 

இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என இலங்கை தமிழர்களுக்கு நாம் உறுதி அளிக்க வேண்டும். ஏனெனில் இதற்கு முன்பு சிங்களர்களுடன் ஆன பல ஒப்பந்தங்கள் கைவிடப்பட்ட கசப்பான அனுபவங்களை இலங்கை தமிழர்கள் பெற்றுள்ளனர். 

இலங்கையில் வருகிற செப்டெம்பர் மாதம் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் மற்றும் பேரணி நடத்த சிங்கள தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். 

இதற்கிடையே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தம்பி கோட்டபாய ராஜபக்ஷ 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்வதற்கான ஆவணங்களை தேடிவருகிறார். 

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தப்படி தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே கவுன்சில் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படும் என அதிபர் ஜெயவர்த்தனா அதிகார பூர்வமான ஒப்புதல் அளித்தார். 

ஆனால், இந்த இணைப்புக்கு இலங்கை தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். ஜனதா விமுக்தி பெரமுன என்ற சிங்கள கட்சியின் நீண்ட பிரசாரத்துக்கு பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி இலங்கை உயர் நீதிமன்றத்தில்  3 மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. 

அதில் கிழக்கு மாகாணத்தை தனியாக பிரிக்கும்படி வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அளித்த  தீர்ப்பில் அதிபர் ஜெயவர்த்தனவின் அதிகாரபூர்வமான அறிவிப்பு நீண்ட காலம் ஆகிவிட்டதால் அதற்கு அரசியல் சட்டத்தில் வலு இல்லாமல் போய்விட்டது என கூறப்பட்டது. 

எனவே, வடக்கு-கிழக்கு மாகாணம் ஏற்படாமல் 2007 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக அறிவிக்கப்பட்டது. 

இதன் மூலம் 2007 ஆம் ஆண்டில் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த கடிதத்தின் மூலம் ராஜீவ்- ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை அமல்படுத்த இந்த விஷயத்தில் இந்தியா நேரடியாக தலையிட வேண்டும். 

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா மவுனம் சாதிக்க கூடாது. தமிழ் பேசும் மக்களின் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைப்பது அவசியம். 13 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தப்படி அங்கு தேர்ந்தெடுக்கப்படும் சபை மூலம் பொலிஸ் உள்ளிட்ட அதிகாரம் ராஜீவ்- ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் கீழ் கிடைக்கும். 

எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் அவசரமாக தலையிடுவீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன். மேலும், இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70207-2013-06-09-14-02-23.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE