இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை விரைவில் சிங்களவர்களின் சனத்தொகையை விட அதிகரிக்கும் என முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் அனைத்தும் அடிப்படை அற்றவை என சிரேஷ்ட சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அடிப்படை சனத்தொகை தகவல் அறிக்கையின் பிரகாரம் 74.9 சதவீதமான இலங்கையர்கள் சிங்களவர்கள் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சனத்தொகை பிரிவின் பணிப்பாளரான திருமதி இந்து பண்டார என்பவரே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் சனத்தொகை 9.2 வீதமாக காணப்படும் அதேவேளை இலங்கை மற்றும் இந்திய தமிழர்களின் சனத்தொகை முறையே 11,2 மற்றும் 4.2 வீதமாக காணப்படுகின்றது.
1981 ஆம் ஆண்டு கணக்கெடுப்புகளின் பிரகாரம் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தலா 74 மற்றும் 7 வீதமாக காணப்பட்ட அதேவேளை இலங்கை தமிழர் மற்றும் இந்திய தமிழர்களின் வீதாசாரங்கள் முறையே 12.7 மற்றும் 5.5 ஆகக் காணப்பட்டது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்ட தகவல்கள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தகவல் தருகையில் 1981 – 2011 காலப்பகுதியில் சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதங்கள் முறையே 1.04 மற்றும் 1.87 ஆக காணப்படுகின்றது. எனினும் சில தசாப்தங்களில் முஸ்லிம்களின் சனத்தொகை சிங்களவர்களின் சனத்தொகையை மிஞ்சி விடும் என்பது தவறான கூற்றாகும் என்று கூறியுள்ளார்.
கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை சிங்களவர்களின் சனத்தொகையை விட அதிகம் என்பது தவறானது என்று இந்து பண்டார கூறியுள்ளார். கொழும்பு மாநகர சபையில் கொழும்பு, திம்பிரிகஸ்யாய -1 மற்றும் திம்பிரிகஸ்யாய -2 என மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன. எனினும் இந்த கூற்று கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவை மாத்திரம் அடிப்படையாக கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
பிந்திய அறிக்கைகளின் படி மலாய், பெர்கர் மற்றும் செட்டி உட்பட ஏனைய இனக்குழுக்களின் வளர்ச்சி வீதம் 0.23 ஆகும்.
இலங்கையில் 70.2 வீதமான பௌத்தர்களும், 12.6 வீதமான இந்துக்களும் 9.7 வீதமான முஸ்லிம்களும் 8.1 வீதமான கிறிஸ்தவர்களும் வாழ்வதாக 2012 ல் திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக பண்டார் தெரிவித்துள்ளார்.
ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட குறைவாக காணப்படுவதாகவும் பெண்களின் ஆயுட்கால அதிகரிப்பு ஆண்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லுதல் என்பனவே இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் அதேவேளை வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறிய அவர் வேலையாற்றல் உள்ளவர்களின் தொகை அதிகரிப்பு காணப்படுவதாகவும் இது நாட்டின் வளச்சிக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.(மூலம்: kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.