......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 March 2013

எய்தவன் இருக்க…….?


buddisht_monks- ஒகொடபொல றினூ -
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் முன்னொருபோதுமில்லாத நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. பேரினவாத சக்திகள் நம் சமூகத்தின் மீது அன்றாடம் திட்டமிட்டு நடத்துகின்ற விஷமச் செயல்களையும் அட்டூழியங்களையும் இதுநாள் வரை அவதானித்துக்கொண்டும், நாட்டின் அமைதி மற்றும் சகவாழ்வு கருதி, அவற்றை மிகுந்த வேதனைகளுக்கு மத்தியில் சகித்துக்கொண்டும் நம்மில் பலர் இருந்து வருகின்றோம்.

இவற்றுக்கு ஒரு படி மேலே சென்று இந்த அட்டூழியங்களுக்கு எதிராக சில தனி நபர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் உரிய நேரத்தில் குரல் கொடுத்தும் அதிகார வர்க்கத்தினரை சந்தித்து எமது நிலைமைகளை தெளிவாக எடுத்துக்கூறியும் வருகின்றனர்.
என்றாலும் எம்மீதான வன்முறைகளும் எமது அடிப்படை உரிமைகள் மீதான ‘கை வைப்புக்களும்’ அணுவளவேனும் குறைவடையவில்லை. மாறாக அவை நாளுக்கு நாள் மிகத் தீவிரமான முறையில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
இத்தருணத்தில் நாம் சில விடயங்களை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலான பூர்வீக வரலாற்றைக்கொண்ட முஸ்லிம் சமூகம், நேற்று முளைத்த ஒரு சில இனவாதக் குழுக்களின் அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து தனது அடையாளத்தை இழந்து போவதா?
நம்மை இந்த இக்கட்டான சூழ்நிலையில் வழிநடத்தவேண்டிய – நாம் தேர்ந்தெடுத்த- நமது அரசியல் தலைமைகள் எங்கே?
அன்று தம்புள்ள பள்ளிவாயலில் தொடங்கி இன்று மாத்தறை திக்வெல்லயில் ஹிஜாப் அணியக்கூடாதென எச்சரித்து எமது சகோதரிகள் மூவரை (இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது) பேரினவாத இளைஞர் குழுவொன்று தாக்கியுள்ளமை வரையான பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்பில் அதிகாரத்தில் உள்ள நமது அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், வாய் மூடி மௌனிகளாக இருந்தமையன்றி, எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைதான் என்ன?
நாம் நமது ஒட்டுமொத்த எதிர்ப்புக்களையும் அதிருப்திகளையும் முதலில் வெளிப்படுத்த வேண்டியது ‘பொதுபலசேனா’ போன்ற பௌத்த பேரினவாத குழுக்கள் மீதா? அல்லது நமது வாக்குகளை பிச்சைகளாகப் பெற்றுக்கொண்டு  முழு நாட்டு முஸ்லிம்களும் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்க சுகபோக வாழ்க்கை நடத்தும் நமது அரசியல் ‘தலைமைகள்’ மீதா?
பள்ளிவாயல் மீதான ஆக்கிரமிப்பில் தொடங்கிய பொதுபலசேனா உள்ளிட்ட பேரினவாதக் குழுக்களின் அட்டூழியங்கள் ஹலால், ஹிஜாப், சட்டக்கல்லூரிக்கான முஸ்லிம்  மாணவர் அனுமதி, முஸ்லிம் வர்த்தகஸ்தாபனங்கள் மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய வங்கிமுறை, மற்றும் காதி நீதிமன்ற முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பதம் பார்த்தும், பதம்  பார்த்துக்கொண்டும் இருக்கின்றன. பெரும்பான்மை சிங்கள சமூகத்தில் வெறுமனே ஒரு சிறு குழுவாக இருந்துகொண்டு நன்கு திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படும் இவர்களின் பின்னணியில் இருப்பது வெளிநாட்டு சக்திகளாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும் ஏன் அரசாங்கமாகக் கூட இருக்கட்டும், யாராக  இருந்தாலும் இந்த அநீதிகளுக்கெதிராக செயற்படவேண்டிய நமது அரசியல் தலைமைகள் ஏன் இவற்றை ஒரு பொருட்டாகவே கருதவில்லை? என்பதுதான் இன்று சாதாரண ஒரு பொதுமகன் கேட்கும் கேள்வியாக இருக்கின்றது.
“ஹலால் சான்றிதழ் வழங்குவதை வாபஸ் பெற்றால், இலங்கை முஸ்லிம்கள் மேலும் பல உரிமைகளை இழப்பதற்கு அது வழிகோலும்” என ஆரம்பத்தில் குறிப்பிட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, இன்று ஹலால் விடயத்தை அரசுக்கு கைதுறக்கும் நிலைக்கு வந்துள்ளமைக்கும் – அந்த நிலைப்பாட்டைக் கூட ஏற்காமல் – “அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழும் இந்த நாட்டில் ஹலால் சான்றிதழ் வழங்கப்படக்கூடாது” என்று கோஷம் எழுப்பி பொதுபலசேனா எச்சரிக்கை விடுப்பதற்கும், “ஹலால் வழங்கும் விடயத்தையோ அது தொடர்பான நிர்வாக விடயங்களையோ அரசாங்கத்தால் பொறுப்பேற்க முடியாது” என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பதற்கும் முதுகெலும்பில்லாத நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள்தான் மூல காரணம் என்றால் அது மிகையில்லை.
“பேசக்கூடாத இடத்தில் பேசுபவன் முட்டாள் என்றால் பேச வேண்டிய இடத்தில் பேசாதவன் அதைவிட முட்டாள்” என்ற நிலைமை இன்று நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு நன்றாகவே பொருந்துகின்றது. எப்படிப்பார்த்தாலும் இன்றைய காலகட்டத்தில் நமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் முட்டாள்களாகவே இருக்கின்றனர் அல்லது அவ்வாறுதான் இருக்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப் பட்டிருக்கின்றனர்.
எதிர்க்கட்சித்தலைவர் அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் மீதான இனவாதச் செயல்கள் தொடர்பிலான கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு சில முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரை உரையாற்றவிடாது குறுக்கீடு செய்து (பேசக்கூடாத இடத்தில் பேசி) தாங்கள் மூடர்கள் என்பதை நிரூபித்து இந்நாட்டின் முழு மொத்த முஸ்லிம்களினதும் எதிர்ப்பினை வாங்கிக்கட்டிக்கொண்டார்கள்.
அதேபோன்று ஹிஜாப் தொடர்பில் நேற்றைய தினம் (27.02.2013) கருத்து வெளியிட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினருமான மொஹமட் முசம்மில் “முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவானது மத பயங்கரவாதத்தை வெளிப்படுத்துகிறது” என்ற முட்டாள் தனமான கருத்தொன்றைத் தெரிவித்து எம்மை விரட்டியடிக்க கங்கணம்  கட்டியுள்ளவன்  கைகளில் கற்களைப் பொறுக்கிக்கொடுக்கும் கைங்கரியத்தைச் செய்திருக்கின்றார்.
இது ஒரு புறமிருக்க , பேச வேண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்களில் – குறிப்பாக பாராளுமன்ற குழுநிலை விவாதங்களின் போது – நமது அரசியல் தலைமைகள் வாய் மூடி மௌனிகளாக இருந்து, எரிகின்ற இனவாதத் தீக்கு எண்ணெய் வார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலைமை இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற மிகப்பெரும் துர்ப்பாக்கியமாகும்.
முஸ்லிம்களின் சமகால நிலைமைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான பல கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திவரும் முஸ்லிம் புத்திஜீவி ஒருவர் தனது முக நூலில் “முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாத குழுக்களின் அட்டூழியங்களை இனியும் சகித்துக்கொண்டிருக்க முடியாது. குறைந்தபட்சம் நமது ஜனநாயக ரீதியான எதிர்ப்பையேனும் அமைதியான ஆர்ப்பாட்டங்களின் மூலம் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த முன்வர வேண்டும்.” என்ற ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. என்றாலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்களில்,  தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தாம் மட்டும் சுகபோக வாழ்வு வாழும் இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு எதிரான இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மனோநிலை எந்தளவுக்கு வெளிப்படும் என்பது கேள்விக்குறியே.
அங்ஙனம் அது உரிய முறையில் வெளிப்படுத்தப்படாதிருப்பின் மாற்று அரசியல் சக்தி பற்றிப் பேசும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பு கானல் நீராகவே போய்விடும் சாத்தியம் உள்ளது.


(மூலம்:kattankudyinfo.com  )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE