பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயக அரசொன்று தனது முழு தவணையையும் முடித்து வரலாறு படைத்துள்ளது. இது மிகப் பெறும் ஜனநாயக வெற்றி என பிரதமர் ராஜா பர்வெஸ் அஷ்ரப் அறிவித்துள்ளார்.
“எதிர்காலத்தில் ஜனநாயகத்திற்கு எவரும் ஊரு விளைவிக்க முடியாது” என அஷ்ரப் வலியுறுத்தினார்.
எதிர்வரும் மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதுவரையான காலத்திற்கு பாகிஸ்தானில் இடைக்கால அரசு அமைக்கப்படவுள்ளது. 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருவான பின் அந்நாட்டு அரசுகள் அடிக்கடி இராணுவ புரட்சிக்கு உள்ளாகி வருகின்றன. ஜனநாயக முறையில் தேர்வான அரசு கவிழ்க்கப்பட்டு அல்லது சதி செய்து அல்லது தலைமைகள் கொல்லப்பட்டு ஆட்சி மாற்றப்பட்டு வந்தது.
“ஜனநாயக மற்றும் ஜனநாயகமற்ற நிறுவனங்களுக்கு இடையிலான போராட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. கடைசியில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது” என்று பிரதமர் அஷ்ரப் தொலைக்காட்சி ஊடே நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். பாகிஸ்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் அரசின் தவணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு கவிழ்க்கப்பட்டு தேர்தல் வரையான இடைக்கால அரசை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் தேர்தல் நீதி, நியாயமாக நடத்தப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். இதில் பிரதான எதிர்க்கட்சிகளான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் தலைமையிலான கட்சி மற்றும் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தலைமையிலான கட்சி, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு சவாலாக உள்ளதாக கருதப்படுகிறது.
மறுபுரத்தில் பாக். அரசு கடந்த காலங்களில் அந்நாட்டு நீதித்துறை, இராணுவம் மற்றும் உளவுப் பிரிவுகளிடம் கடுமையான சவாலை எதிர்நோக்கியே தனது தவணைக்காலத்தை முடித்துள்ளது. குறிப்பாக ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதோடு, இதனையொட்டி முன்னாள் பிரதமரை நீதிமன்றம் தகுதி நீக்கியது. இதனையடுத்து பிரதமராக பதவியேற்ற அஷ்ரபுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பொதுத் தேர்தல் அரசியலமைப்பின்படி இன்னும் 60 தினங்களுக்குள் நடைபெறும் என கூறப்பட்ட போதும், அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும் தேர்தலை எதிர்வரும் 8, 9 அல்லது 10 ஆம் திகதிகளில் நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.(மூலம்:http://www.thinakaran.lk/2013/03/18/?fn=w1303182 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.