ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கைக் குழுவினரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததையடுத்தே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றும், இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென மேற்கொள்ளப் படும் நிவாரண செயற்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்.
மீள்குடியமர்த்தல், நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இலங்கைத் தூதுக்குழுவினர், நவநீதம் பிள்ளைக்கு விளக்கமாக எடுத்துரைக்கவுள்ளனர்.
இதுபற்றி தகவல் தெரிவித்த அமைச்சின் உயரதிகாரி ஒருவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை இந்தத் தூதுக்குழுவுக்குத் தலைவராக நியமித்துள்ளார் என்றும், அதனையடுத்து தூதுக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை இங்கிருந்து ஜெனீவா புறப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகளும் உடன் செல்வார்கள். சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் 4 பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல்களும், ஒரு சிரேஷ்ட அரச சட்டத்தரணியும் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள மஹிந்த சமரசிங்க, கடந்த ஆண்டுக்குப் பின்னர் இலங்கை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டத்தையும் எந்தளவுக்கு இப்போது நடைமுறைப்ப டுத்தியிருக்கிறது என்பதையும் விளக்கிக் கூறவுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் விளக்கிக் கூறுவார்.
இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4.20க்கு ஆரம்பமாகும். இங்கு இலங்கை தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரபூர்வமான பதில்களை எடுத்துரைக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது.(மூலம்:http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/02/24/?fn=n1302241 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.