-றிப்தி அலி
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சிபாரிசு செய்துள்ளது.
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்வோம். எனினும் இந்த செயற்பாட்டினை அரசாங்கம் பொறுப்பேற்குமாறு அரசாங்கத்திடம் ஆலோசனை விடுக்கின்றோம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.
"கடந்த 2006ஆம் ஆண்டு முதல் நாம் தெரிவித்து வருகின்றதையே நாம் இன்று தெரிவிக்கின்றோமே தவிர புதிதாக எவற்றையும் கூறவில்லை. இதனால் ஹலால் சான்றிதழ் செயற்பாட்டை அரசாங்கம் பொறுப்பேற்று அனைத்து சமூகங்களும் ஏற்கும் விதமான ஒரு பொறிமுறையை மேற்கொள்ள அரசாங்கம் முன்வர வேண்டும்" எனஅவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த ஆலோசனையை அமைச்சரவை உப குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். இதனால் அவர்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவோம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.
எனினும் இந்த தீர்மானத்தினை எடுப்பதற்கு அரசாங்கத்தினால் எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை தொடர்பான இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
"ஹலால் சான்றிதழினை பெற்ற ஒரிரு நிறுவனம் மாத்திரமே அந்த சான்றிதழை இன்று வரை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. எனினும் ஏனைய எந்த நிறுவங்களும் வாபஸ் பெறுவது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எனினும், ஹலால் சான்றிதழினை பெற்ற நிறுவனங்களிற்கு அழுத்தங்கள் பிரேயாகிக்கப்படுகின்றது எமக்கு தெரிந்த விடயமேயாகும். எனினும் இதுவரை வாபஸ் பெறுவது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. எனினும் முஸ்லிம்களுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ் என்ற நிலைப்பாட்டிலேயே உலமா சபை உள்ளது.
இதனை தொடர்வோம், மேற்கொள்வோம். ஹலால் சான்றிதழினை வழங்கு செயற்பாடு இரண்டு வகையில் மேற்கொள்ள முடியும். முதலாவது அரசாங்கத்தினால் மேற்கொள்ளல் மற்றையது தனியார் நிறுவனமொன்றினால் மேற்கொள்ளவது.
தற்போது நாங்கள் இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையினை அரசாங்கத்தினால் மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளளோம். அதாவது பௌத்த நாடான தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசாங்கத்தினால் ஹலால் சான்றிதழினை வழங்குவது போன்று இங்கும் வழங்க சிபாரிசு செய்கின்றோம்.
மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் ஹலாலுக்கென்று தரங்கள் உண்டு. அதன்போன்ற தரங்கள் இலங்கையிலும் அறிமுகம் செய்யப்படுதல் வேண்டும். கடந்த 2012 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடையும் ஜம்இயதுல்ல உலமாவின் நிதியாண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு அமைய 150 நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாம் பெற்றுள்ள வருமானம் 17 மில்லியன் 9 இலட்சத்து 2 ஆயிரத்து 870 ரூபாய் ஐம்பது சதம் ஆகும். ஆனால் ஹலால் செயற்பாடுகளுக்குரிய செலவினங்களுக்கு பின் 2 மில்லியன் 6 இலட்சத்து 69 ஆயிரத்து நானூற்று இருபது ரூபாய் எண்பது சதமாகும். இந்த தொகை ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டு வருகின்றது.
ஹலால் சான்றிதழுக்காக பெறப்பட்ட நிதி தீய நோக்கங்களுக்காக செலவிடப்படுகின்றது என்பது தொடர்பாக சிலரால் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றோம். ஹலால் செயற்பாட்டினர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நன்மை அடைந்ததை விட உற்பத்தி நிறுவனங்களே நன்மையடைந்தமை குறிப்பிடத்தது.
அத்துடன் எமது அமைப்பின் கணக்கு விபரங்களை உரிய அதிகாரிகள் வந்து பரீசிலனை செய்து உண்மையை அறியலாம் என நாம் பகிரங்கமாக தெரிவித்தபோதும் யாரும் அதனை மேற்கொள்ளவில்லை. தவறாக கருத்துக்களையும் அடிப்படையற்ற சந்தேகங்களையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி ஹலாலை சான்றிதழ் விடயத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் குறிப்பிக்காக நட்புறவுடன் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் சிங்கள மற்றும் முஸ்லிம் குழப்பத்தையும் பிரிவினை ஏற்படுத்த சில முயற்சிக்கின்றமை எம்மை கவலை கொள்ளச் செய்கின்றது.
பொதுபலசேன அமைப்பை நாங்கள் கவனித்திற்கு கொள்ளவில்லை. அந்த அமைப்பினை கவனதிற்கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுமில்லை. எனினும் நாட்டில் இன ஒற்றுமை, சமாதானம் சகவாழ்;வு போன்ற செயற்பாடுகளுக்காகவே இந்த தீர்மானத்தினை மேற்கொண்டோம்" என்றனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.முபாரக், பிரதி பொது செயலாளர் தாஷிம் மௌலவி, ஹலால் பிரிவு செயலாளர் அஷ்ஷெய்க் முர்சித், ஊடக பேச்சாளர் அஷ்ஷெய்க் பாசீல் பாரூக் மற்றும் ஹலால் செயற்பாட்டாளர் தஹ்லான் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டனர். (படங்கள்:பிரதீப் பத்திரன)
(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59623-2013-02-26-11-27-52.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.