......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 4 February 2013
சுதந்திர தினம்: மஹேல, முரளி, சங்கா ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள்
மஹேலவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
கொடூர யுத்தத்தை வெற்றிகொண்டுள்ள நிலையில் நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் ஒளிமயமானதும் செழுமைமிக்கதுமான எதிர்காலம் மலரவேண்டும் என மஹேல ஜயவர்தன தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் திருநாடு 65ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடும் இவ் வேளையில், குறிப்பாக கொடூர யுத்தத்தை வெற்றிகொண்டுள்ள நிலையில் நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் ஒளிமயமானதும் செழுமைமிக்கதுமான எதிர்காலம் மலரவேண்டும்.
இதேவேளை, பலதரப்பட்டவர்களின் தியாகங்களின் பலனாக சமாதானத்துடனும் ஒத்திசைவுடனும் வாழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு சகல இலங்கையரும் நன்றி பகர்கின்றனர். அவர்களது தியாகங்கள் வெறுமனே வீணாகிவிடாமல் நாட்டின் ஐக்கியத்திற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைத்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும். அப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்திற்காகவே அன்றி அது ஒரு கட்டாயதிற்காக இருந்துவிடக்கூடாது. எமது எதிர்கால சந்ததியினருக்காகவும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
அத்துடன் ஒவ்வொரு இலங்கையரினதும் ஒளிமயமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கடந்த கால தவறுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்று செயற்படுவது மிகமிக அவசியமாகும்.
ஓரிரவில் எங்களால் மாற்றங்களைக் கொண்டு வருவது இயலாமல் இருக்கக்கூடும் ஆனால், ஒவ்வொரு வருடமும் உருண்டோடும்போது ஒரே நாட்டில் ஒரே மக்கள் என்ற இலக்கை அடையும் பொருட்டு அதனை வெகுவாக அண்மிப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். குமார் சங்கக்காரவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
விடுதலை, சட்டத்தின் ஆட்சி, நேரிய செயல், நேர்மை ஆகியன மிக முக்கியம் என்பதை உணர்ந்து நியாயமும் சமத்துவமுமான சமுதாயத்தைக் கட்டி எழுப்ப மனப்பூர்வமாக தொடர்ந்தும் உழைக்கவேண்டுமென குமார் சங்கக்கார தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது நாட்டின் 65ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனிப்பட்ட செய்தி ஒன்றை வரையுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையிட்டு நான் பெருமை அடைகின்றேன்.
சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில் விடுதலை, சட்டத்தின் ஆட்சி, நேரிய செயல், நேர்மை ஆகியன மிக முக்கியம் என்பதை உணர்ந்து நியாயமும் சமத்துவமுமான சமுதாயத்தைக் கட்டி எழுப்ப மனப்பூர்வமாக தொடர்ந்தும் உழைக்கவேண்டும் என்பதையே எனது நாட்டிற்காகவும் எனது சக இலங்கையருக்காகவும் நான் மிகவும் விரும்புகின்றேன்.
இதன் மூலம் எமது பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள், தொடரும் பிள்ளைகள் அனைவரும் நாம் வாழ்ந்த காலத்தில் இந்த நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் மறைந்து சமாதானம், முன்னேற்றம், செழுமைமிக்க நாடாக மாறியுள்ளதை பின்னோக்கிப் பார்ப்பார்கள்.
இரண்டாவது உலகப் போர் முடிவுற்றதும் நமது நாடு சுதந்திரம் அடைந்தபோதிலும், உலகப் போரினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் அழிவுகள் கற்பித்த பாடங்களைக்கொண்டு மோதலற்ற ஒரு நேரிய வழியை எங்களால் உருவாக்க முடியாமல் போய்விட்டது. இதன் விளைவாக எமது சுதந்திர ஆட்சியில் கிட்டத்தட்ட அரைவாசிக் காலம் கொடூர மோதலாலும் இரத்தக்களரியாலும் கழிந்து போய்விட்டது.
அரசாங்கம் உட்பட சகல சமூகங்களையும் சேர்ந்த இலங்கையரினது கடும் முயற்சியாலும் தியாகங்களாலும் கிடைக்கப்பெற்றுள்ள இந்த சமாதான சூழலில், ஒற்றுமையாக வாழவும் பரஸ்பரம் மேலோங்கும்பொருட்டு ஒவ்வொருவரும் சமத்துவமான இலங்கையர் என்ற வகையில் ஒத்திசைவுடன் உழைக்கவும் தொடர்ந்து போராடுவோமாக. சுழற்பந்து ஜாம்பவான் முரளியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
எமது ஆற்றல்களையும் திறமைகளையும் ஒன்று திரட்டி நாங்கள் பலம்வாய்ந்த ஒரு கிரிக்கெட் அணியாக பல வெற்றிகளை நோக்கிப் பயணித்தது போன்று எமது மக்கள் ஐக்கியப்பட வேண்டுமென சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தனது சுதந்திரதின வாழ்த்துச் செய்தி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வருடா வருடம் சுதந்திர தினத்தை நாங்கள் கொண்டாடும் போது நம் நாட்டு மக்கள் ஐக்கியப்படுவதைப் பார்ப்பதற்கு எனது உள்ளம் துடியாய்த் துடிக்கும். எமது ஆற்றல்களையும் திறமைகளையும் ஒன்று திரட்டி நாங்கள் பலம்வாய்ந்த ஒரு கிரிக்கெட் அணியாக பல வெற்றிகளை நோக்கிப் பயணித்தது போன்று இது அமைகின்றது.
இரக்கக் குணத்தின் மகிமையை எமது நற்குண மன்றம் (Foundation of Goodness) ஊடாக எடுத்துக்காட்டும் வகையில் தென் பகுதியிலும் வட பகுதியிலும் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நாங்கள் கடுமையாக முயற்சிக்கின்றோம். இவை செழுமையான நாட்டைக் கட்டி எழுப்ப வழிவகுப்பதுடன் எமது கிராம மக்களுக்கு சிறப்புடன் வாழக்கூடிய வலிமையையும் கொடுக்கும் என்பது நிச்சயம்.
நல்லெண்ணம், ஐக்கியம், ஒத்திசைவுத் தன்மை மற்றும் செழுமை நிறைந்த நாடாக எனது நாடு மென்மேலும் உயரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.