ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை அமர்வின் போது இலங்கை சார்பான இராஜதந்திய முயற்சிகளில் அமைச்சர்களுக்கு முக்கிய பாத்திரம் வழங்குவதை அரசாங்கம் தவிர்க்கவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மனித உரிமை பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தில் இலங்கையின் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் எனவும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இலங்கை தொடர்பிலான இன்னுமொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது. முக்கியமாக இலங்கைக்கு எதிரான புலிகளின் சார்பு சக்திகளின் பிரசாரத்தை முறியடிப்பதற்கான உத்தியோகபூர்வ மட்ட தூதுக்குழுவுக்கு ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமைதாங்குவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெனிவாவில் கடந்தவருடம் இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக பல அமைச்சர்கள் தங்கிருந்தனர். இம்முறை இராஜதந்திர அலுவலர்களே முக்கிய பாத்திரம் வகிப்பர் என இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவான நாடுகளான சீனா, ரஷ;யா,கியூபா போன்ற நாடுகள் அங்கம் வகிக்காது. அந்த நாடுகளுக்கு பதிலாக ஐரோப்பிய நாடுகளின் அங்கத்துவமே அதிகரித்திருக்கும்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.