அமெரிக்காவில் ‘பிஸ்கல் க்ளிப்’ எனப்படும் பொருளாதார தேக்க நிலையை தவிர்க்க ஜனாதிபதி ஒபாமா கடைசி முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த சிக்கலுக்கு இன்றைய தினத்திற்குள் ஆளும் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாத பட்சத்தில் புத்தாண்டில் தானாக வரி அதிகரிப்பு ஏற்படவுள்ளதோடு, செலவு குறைப்பும் ஏற்படும்.
இதன்படி புத்தாண்டில் ஏழை, செல்வந்தர் பாராமல் வரி உயரவுள்ளதோடு அரசின் பொது மற்றும் இராணுவ செலவில் 110 பில்லியன் டொலர் குறைப்பு ஏற்படும். இதன் மூலம் அமெரிக்கா பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வருமான வரியை குறைத்து சட்டம் இயற்றினார். அந்த வருமான, வரிக்குறைப்பின் காலம் 2012 டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. வரிக்குறைப்பை நீட்டிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ, அமெரிக்கப் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும். அதுவும் டிசம்பர் 31ம் திகதிக்கு (இன்று) முன்னதாகவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஜனாதிபதி ஒபாமாவின் ஒப்புதல் கையெழுத்தும் இடப்பட வேண்டும்.
ஒருவேளை புதிய சட்டத்திருத்தம் இயற்றப்படாவிட்டால், ஜனவரி 1ம் திகதி முதல் பழைய பில் க்ளிண்டன் காலத்து வரிவிகிதம் தானாகவே அமுலுக்கு வந்துவிடும். ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் அதிக வருமான வரி செலுத்த வேண்டி வரும். புதிய சட்டம் மூலம் வருமான வரியை குறைக்கும் சட்டம் இயற்றித்தான் நிலைமையை சீராக்க முடியும்.
ஜனாதிபதி ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தில் 250 ஆயிரம் டொலருக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியை நிச்சயமாக உயர்த்துவோம். அதற்கு கீழே உள்ளவர்களுக்கு தற்போதைய (புஷ் ஆட்சிக்கால) வரியே நீடிக்கும் என்று வாக்கு கேட்டு வெற்றிபெற்றார். எனினும் இதனை நிறைவேற்ற காங்கிரஸ் சபையில் ஒபாமா கட்சியினருக்கு பெரும்பான்மை பலம் இல்லை. காங்கிரஸ் சபையில் நிறைவேற்றி பின்னர் செனட் சபையிலும் வழி மொழியப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட முடியும். செனட் சபை தீர்மானத்தை காங்கிரஸ் உறுதி செய்யவும் வழி வகை உள்ளது.
பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் குடியரசுக் கட்சியினர் பழைய புஷ் காலத்து வரியே அனைவருக்கும் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஜனாதிபதி ஒபாமாவும், அவருடைய ஜனநாயகக் கட்சியினரும் அதற்கு உடன்படவில்லை. 250 ஆயிரம் வருமான வரம்பிலிருந்து 400 ஆயிரம் என, ஒபாமா தளர்த்திக் கொண்டார். மேலும் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு முன்பாக காங்கிரஸ் சபையில் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் சபை தலைவர் ஜோன் பேனர் ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துப் பார்த்தார். அவரது சொந்த கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். எந்த முடிவும் எட்டாமலே கிறிஸ்மஸ் விடுமுறைக்கு உறுப்பினர்கள் சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் சபை மற்றும் செனட் சபையின் இரு கட்சி தலைவர்களையும் ஒபாமா அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தை முன்னேற்றமாக இருப்பதாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஒபாமாவும் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செனட் சபையில் இரு கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் இயற்ற முயற்சி நடைபெறுகிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் சபையின் ஒப்புதல் பெற்று இன்று இரவுக்குள் ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட வேண்டும். உடனடித் தீர்வுக்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.